தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,000ஐ கடந்துள்ளது. இன்று புதியதாக 266 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 203 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,023 ஆக அதிகரித்துள்ளது. அதே போல இதுவரை 30 பேர் தமிழகம் முழுவதும் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 1,379 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,611 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் இதுவரை 1,458 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 1,50,107 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் 10,617 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் 49 பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை வீட்டு தனிமைப்படுத்தலில் 37,206 பேர் இருக்கின்றனர். 1,564 பேரின் மாதிரிகள் பரிசோதனையில் உள்ளது. சென்னையை அடுத்து விழுப்புரத்தில்தான் இன்று அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.