தேசிய அளவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவுகளும், பூட்டுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோன பாதிப்பு அதிகரித்து வருகின்றது. ஏற்கெனவே 35 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 38 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதியதாகப் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 3 பேரில் 61 வயது முதியவர் சேலம் அரசு மருத்துவமனையிலும், 39 வயதுடைய சென்னை அண்ணா நகரைச் சார்ந்த நபர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், 73 வயதுடைய மூதாட்டி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாகத் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35லிருந்து 38 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமையைச் சமாளிக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் ஒன்று கூடுதலை தவிர்க்கும் விதமாக மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் செயல்படுவதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரையில் மளிகைக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல், மதியம் 2.30 வரைக்கு மட்டுமே திறந்திருக்க வேண்டும்.
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.
அதே நேரத்தில் மெடிக்கல் ஷாப்புகள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) நாள் முழுவதும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் சென்னையில் பெரும்பாலான உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமேட்டோ ஆகியவை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் இந்த நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, காலை உணவு டெலிவரியை காலை 7 முதல் 9.30-க்குள்ளும், மதிய உணவு டெலிவரியை பகல் 12 முதல் மதியம் 2.30 மணிக்குள்ளும், இரவு உணவு டெலிவரியை மாலை 6 -லிருந்து இரவு 9 மணிக்குள்ளும் முடித்துக் கொள்ள வேண்டும்.
ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகள் போலீசாரின் அனுமதி சீட்டை பெற்றிருக்க வேண்டும். மேலும், பிரதிநிதிகளின் உடல் நிலை நாள்தோறும் சோதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.