தேசிய அளவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவுகளும், பூட்டுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோன பாதிப்பு அதிகரித்து வருகின்றது. ஏற்கெனவே 23 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 26 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
புதியதாக பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 3 பேரில் 18 வயது இளைஞர் ஒருவரும், 63 மற்றும் 66 வயதில் முதியவர்கள் இருவர் என தெரியவந்துள்ளது. இதில் 66 வயதுடைய ஆண் தாய்லாந்து நாட்டைச் சார்ந்தவர்களோடு தொடர்பில் இருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், இம்மூவர்கள் சென்னை, வாலாஜா மற்றும் பெருந்துறை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள மூன்று பேருடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 26 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமையைச் சமாளிக்கவும், தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும் தமிழக அரசு தேர்வுகளைத் தள்ளி வைத்தும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் தேர்வெழுதாமல் தேர்ச்சி செய்யவும், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், மக்கள் தங்களுக்கான மளிகைப் பொருட்களை இணையம் வாயிலாக பெற எவ்வித தடையும் இல்லை என அரசு தெரிவித்திருக்கிறது. மாறாக சமைத்த உணவுகளை டெலிவரி செய்ய மட்டுமே தடை விதித்திருக்கின்றது.
இந்நிலையில் கொரொனா பாதிப்பினை பொருளாதார பேரிடராக கணக்கில் கொண்டு aமாநில அரசுகள் செயல்பட வேண்டுமென்று தமிழக சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.