This Article is From May 26, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.45 லட்சம் ஆக உயர்வு; 4,167 பேர் உயிரிழப்பு!

Coronavirus: அதன்படி, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.45 லட்சம் ஆக உயர்வு; 4,167 பேர் உயிரிழப்பு!

Coronavirus India: நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் குணமடையும் விகிதமும் இன்று காலை நிலவரப்படி 41.60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், 6,535 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 4,167 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் நாட்டிலே அதிகம் பாதிப்புக்குள்ளான மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து, அதிகளவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறிது.

இதேபோல், பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா மற்றும் ஜார்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்கள் நிறைவடைந்து, கட்டுப்பாடு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் குணமடையும் விகிதமும் இன்று காலை நிலவரப்படி 41.60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, 60,491 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. அதன்படி, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 16லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டதட்ட, 1லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்டிராவை தொடர்ந்து, தமிழகத்தில் தான் அதிகளவிலான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 805 பேருக்கு புதிதாதக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டிலே அதிக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கொண்ட மகாராஷ்டிராவில் நேற்றைய தினம் முதல் மும்பையில் இருந்து 25 விமானங்களும், மும்பைக்கு 25 விமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு விதிமுறைகளை மாநில அரசு நேற்றைய தினம் வெளியிட்டது. 

இமாச்சலப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மேலும் 5 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களிலும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக ஜெய் ராம் தாகூர் தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அங்கு 214 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 63 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர், 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில், மாநிலத்தின் மொத்தத பாதிப்பு எண்ணிக்கையில் ஒரு பகுதி ஹாமிர்பூர் மாவட்டத்திலே பதிவாகியுள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேரியா தடுப்பு மருந்ததான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்தாக கொடுப்பதையும், அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ கன்பரன்சிங் மூலம் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார மையம் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறும்போது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்துவதால் அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்ததாக கடந்த வாரம் லான்செட் பதிப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

.