This Article is From Jul 22, 2020

டெல்லியில் 5 பேரில் ஒருவருக்கு மாதமொரு முறை செரோ-ஆய்வு!

இதுவரை டெல்லியில் 3,690 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 5 பேரில் ஒருவருக்கு மாதமொரு முறை செரோ-ஆய்வு!

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,349 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் இனி ஒவ்வொரு மாதமும் நடைபெறும்
  • டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.25 லட்சமாக உயர்ந்துள்ளது.
  • ஆகஸ்ட் 1 முதல் 5 வரை இந்த தொடர் கணக்கெடுப்பின் முதல் பகுதி தொடங்கும்
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 12 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.25 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் பொது மக்களிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்வதற்கான ஆய்வுகள் இனி ஒவ்வொரு மாதமும் நடைபெறும் என்று மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 1 முதல் 5 வரை இந்த தொடர் கணக்கெடுப்பின் முதல் பகுதி தொடங்கும் என ஜெயின் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களின் சராசரியான 2,000 ஐ விடக் குறைந்துவிட்டதால் டெல்லி அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக மேற்கொள்ளப்பட்ட செரோ-கணக்கெடுப்பு டெல்லியில் ஐந்து பேரில் ஒருவர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளது. நோய்த்தொற்றுடையவர்கள் அதிக எண்ணிக்கையில் அறிகுறியில்லாமல் இருப்பதாகவும், பரவுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டெல்லியில் கொரோனா தொற்று பரவலைக் கண்காணிக்க ஒவ்வொரு மாதமும் செரோ-சர்வே நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சாதாரண மனிதர்களிடமிருந்து எடுக்கப்படும் ரத்த மாதிரிகளில் IgG ஆன்டிபாடிகள் பரிசோதிக்கப்படும். இந்த பரிசோதனையில் யாரேனும் ஒருவர் நேர்மறையாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவருக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றது என அர்த்தம். இந்த பரிசோதனையே செரோ-சர்வே என அழைக்கப்படுகின்றது. மேலும், இந்த பரிசோதனை மூலமாக தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதா என்பதை கண்டறிய முடியும்.

டெல்லியில் கடைசியாக நடத்தப்பட்ட செரோ-கணக்கெடுப்பின் முடிவுகளின்படி கடந்த ஆறு மாதங்களில் 23.48 சதவீதம் பேர் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், “சுகாதாரம் மற்றும் சமூக தொலைதூர கட்டுப்பாடுகளின் அனைத்து நடவடிக்கைகளும் தொடர வேண்டும். எல்லோரும் இப்போதும் முககவசங்களை அணிந்துகொண்டு தங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேற்கு நாடுகளில் தொற்று எண்ணிக்கை குறையும் போது, ​​மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிருகிறார்கள். இது தொற்று பரவலின் இரண்டாவது எழுச்சிக்கு வழிவகுக்கிறது. டெல்லியில் அந்த மாதிரியான சூழ்நிலையைத் தடுக்க வேண்டும்.” என ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் சிக்கலான பராமரிப்பு மருத்துவத்தின் ஆலோசகர் டாக்டர் ரிச்சா சரீன் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் தொகை உள்ளது. டெல்லியின் 11 மாவட்டங்களில் எட்டு மாவட்டங்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமான செரோ பாதிப்பு உள்ளது என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு இயக்குநர் டாக்டர் சுஜீத் குமார் சிங் நேற்று தெரிவித்தார்.

டெல்லி அரசாங்கத்துடன் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடத்திய இந்த ஆய்வு மிகப்பெரியது, மொத்தம் மொத்தம் 21,387 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இனி வரும் கணக்கெடுப்புகளில், ஆராய்ச்சியாளர்கள் முந்தியதைவிட அதிகமாக மாதிரி அளவை எடுப்பார்கள் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

இதுவரை டெல்லியில் 3,690 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.