This Article is From Jun 16, 2020

நாடு முழுவதும் ஒரே நாளில் 10,667 பேருக்கு கொரோனா! 380 பேர் உயிரிழப்பு!!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் 10,667 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 380 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 10,667 பேருக்கு கொரோனா! 380 பேர் உயிரிழப்பு!!

ஹைலைட்ஸ்

  • ஒரே நாளில் 10,667 பேருக்கு கொரோனா! 380 பேர் உயிரிழப்பு!!
  • நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கையானது 3,43,091 ஆக அதிகரித்துள்ளது
  • இதுவரை 9,900 பேர் உயிரிழந்துள்ளனர்

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,43,091 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,53,178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,80,013 பேர் குணமடைந்துள்ளனர். 9,900 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் 10,667 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 380 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில  முதல்வர்களுடன் இன்றும், நாளையும் காணொளி வாயிலாக கலந்துரையாடுகிறார்.  பஞ்சாப், கேரளா, அசாம் மற்றும் பிற அனைத்து வடகிழக்கு மாநிலங்கள் உட்பட 21 மாநில முதல்வர்களுடன் இன்று மாலை 3 மணிக்கு கலந்துரையாடுகிறார். அதேபோல மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களின் முதல்வர்களுடன் நாளை கலந்துரையாடலை நடத்த உள்ளார். கொரோனா தொற்று தடுப்பு குறித்து பிரதமர் நடத்தும் ஆறாவது மற்றும் ஏழாவது சந்திப்புகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் குணமடைந்தோரின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றை நிலவரப்படி நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதமானது 52.46 சதவிகிமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா தொற்று நோயாளிகளை அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தேசிய அளவில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. சமீபத்திய நிலவரப்படி  2,786 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 178 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,10,744 ஆக அதிகரித்துள்ளது. இதில் 56,049 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 50,567 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழந்தோரின் விகிதமானது 3.70 சதவிகிதமாகவும், குணமடைந்தோரின் விகிதமானது 50 சதவிகிதமாகவும் உள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 4,128 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2,250 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையை பொறுத்த அளவில் 59,293 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30,125 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு நேற்று 44 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று புதிதாக 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504 - ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,244 - ஆகவும் உயர்ந்துள்ளது. நேற்று உயிரிழந்த 44 பேரையும் சேர்த்து, மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 797 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.

அமித்ஷா டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் நோயாளிகளை முறையாக கண்காணிப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து மருத்துவமனைகளின் கொரோனா வைரஸ் வார்டுகளில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவுமாறு தில்லி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

சென்னை மற்றும் டெல்லியில் இருந்து கர்நாடகா வரும் மக்கள் கட்டாயமாக மூன்று நாள் நிறுவன மற்றும் 11 நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்று கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா திங்கள்கிழமை அறிவித்தார். இதன் காரணமாக இறப்பு விகிதம் 2.8 சதவிகிதத்திலிருந்து 1.2 சதவிகிதமாகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 51 சதவிகிதத்திலிருந்து 56.5 சதவிகிதமாகவும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளை COVID-19 க்கான சோதனைகள் மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 304 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கர்னூல் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்தினை கடந்துள்ளது. மாநிலம் முழுவதும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். 6,456 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் இதுவரை 4.36 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 80.29 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

.