கேரளாவில் மொத்தம் 357 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
ஹைலைட்ஸ்
- நாட்டிலேயே முதன்முதலில் கேரளாவில்தான் கொரோனா உறுதி செய்யப்பட்டது
- சீனாவின் வுஹானில் படித்து வந்த கேரள மாணவி பாதிக்கப்பட்டார்
- கேரளாவில் மெல்ல மெல்ல கொரோனா கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது
New Delhi: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கேரளா இன்று 100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் உயிர்க்கொல்லி வைரசுடனான அனுபவத்தை கேரள முதல்வர் பிரனாயி விஜயன் பதிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன. மொத்தம் 357 பேருக்கு பாதிப்பு இருந்தது. அவர்களில் 97 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். அதனால் தற்போது 258 நோயாளிகள் மட்டுமே மாநிலத்தில் இருக்கின்றனர். 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மொத்தம் 12,710 பேரிடம் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் கேரளா. இங்கு கடந்த ஜனவரி மாதம், சீனாவின் வுஹான் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன்பின்னர் மாநில எல்லைகள் மூடப்பட்டதுடன், 28 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அங்கு நிலைமை சற்று சீரடையத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக கேரள சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'கொரோனாவை எதிர்கொள்ள நாங்கள் மேற்கொண்ட ஊரடங்கு திருப்திகரமாக உள்ளது. தனிமைப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்தல், பரிசோதனை, சிகிச்சை ஆகியவை நல்ல முடிவுகளைத் தந்துள்ளன.' என்றார்.
ப்ளாஸ்மா பரிமாற்ற முறையை மேற்கொள்ள கேரள அரசு அனுமதி பெற்றுள்ளது. இதன்படி, கொரானா பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களிடம் இருந்து ப்ளாஸ்மா செல்கள் பெறப்பட்டு, அவை பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தப்படும். நிலைமை மிக மோசமாக உள்ள நபர்களுக்கே இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்படும்.
குணம் அடைந்தவர்களின் உடலில் இருக்கும் ப்ளாஸ்மா, அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது என்றும், அது பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,412 ஆக உள்ளது. அவர்களில் 504 பேர் குணம் அடைந்துள்ளனர். 5,709 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.