நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 11,929 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இதுவரை பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாகும். அதே போல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 311 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3,20,922 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,62,379 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,49,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 9,195 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.
கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் பட்டியலில் தற்போது, வாசனை மற்றும் சுவையிழப்பு போன்ற அறிகுறியையும் மத்திய அரசு புதியதாக இணைத்துள்ளது.
தேசிய அளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் வரிசையில் டெல்லி தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருந்துவருகிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 38 ஆயிரத்தினை கடந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக 2,000க்கும் அதிகமானவர்கள் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,493 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 127 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,717 போ் மாநிலம் முழுவதும் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மும்பை நகரத்தில் உள்ள மருத்துவமனையில் 99 சதவிகித ஐசியு பிரிவுகள் முழுமையாக பயன்பாட்டில் உள்ளதாகவும், 94 சதவிகித வென்டிலேட்டர்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் மும்பை மநாகராட்சி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் உத்ரகாண்ட் மாநிலத்தில் பொது வெளியில் முககவசம் அணியாமல் வெளியில் செல்வோருக்கு ஆறு மாத சிறை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதே போல சீனாவில் புதியதாக 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மீண்டும் இந்த தொற்று பரவுவதற்கான வாய்ப்பு குறித்து கவலைகள் மேலெழுகின்றன என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.