New Delhi: தேசிய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,525 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். 122 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 74,281 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,415 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 47,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல நாடு முழுவதும் 24,386 பேர் தற்போது வரை குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தொற்றால் நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூபாய் 20 கோடி அளவிலான ஊக்கப் பொதியை அறிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள முழு முடக்க நடவடிக்கை இம்மாதம் மே17-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் நான்காவது முறையாக முழு முடக்க நடவடிக்கை சில மாற்றங்களுடன் தொடங்கும் என தெரிவித்திருந்தார்.
தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 24,427 பேர் கொரோனா தொற்றால் இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து குஜராத், மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் நேற்று 1,000க்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 17 சதவிகிதத்தினர் மும்பையை சார்ந்தவர்களாவார்கள். நேற்றைய நிலவரப்படி மும்பையில் மட்டும் 30 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 60 சதவிகித இறப்புகள் மும்பையில் நிகழ்கின்றன. இதில் மற்றொரு கவலையளிக்கக்கூடிய விடயம் என்னவெனில், இந்நகரத்திலிருந்து புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சரி செய்ய பிரதமர் நரேந்திர மோடி, 'ஆத்மனிர்பார் பாரத் அபியான்' என்ற திட்டம் மூலமாக ரூ. 20 லட்சம் கோடி வரையில் ஊக்க பொதியை ஒதுக்கியுள்ளதாக நேற்று அறிவித்திருந்தார். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். இந்நிலையில் முழு முடக்கம் தொடர்பாக பிரதமர் நேற்று மூன்றாவது முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.