This Article is From Jun 24, 2020

இந்தியாவில் கொரோனா நிலவரம்: இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 465 பேர் உயிரிழப்பு!

நாட்டிலே அதிகம் பாதிப்புக்குள்ளான முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு இதுவரை 1.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா நிலவரம்: இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 465 பேர் உயிரிழப்பு!

நாட்டில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 4,56,183 அதிகரித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • புதிதாக 15,968 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு
  • உயிரிழப்பு எண்ணிக்கையானது 14,476ஆக உயர்வு
  • நேற்று ஒரே நாளில் 2,15,195 பேருக்கு சோதனை
New Delhi:

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 15,968 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 465 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, நாட்டில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 4,56,183ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கையானது 14,476ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 2.58 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 56.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில், நேற்று ஒரே நாளில் 2,15,195 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவே ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச சோதனை அளவாகும். இதன்மூலம் இந்தியாவில் இதுவரை 73,52,911 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

நாட்டிலே அதிகம் பாதிப்புக்குள்ளான முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு இதுவரை 1.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 238 பேர் உயரிழந்துளளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கையானது 6,531 ஆக அதிகரித்துள்ளது. 

இதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் அதிகபட்சமாக கிட்டத்தட்ட 4,000 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 66,602ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் இந்தியாவில் எந்த மாநிலமும் பதிவுசெய்யாத அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

கொரோனாவுக்கு எதிரான புதிய போராக ஜூலை 6ம் தேதிக்குள் அனைத்து இல்லங்களிலும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமையைப் பற்றி அறிய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான தமோனாஷ் கோஷ் கொரோனா வைரஸ் பாதிப்பால், மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். 

உலகளவில், டிசம்பர் மாதம் சீனாவில் முதல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 92 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில், அமெரிக்காவில் அதிகமாக 23 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலகளவில், கொரோனா வைரஸால் சுமார் 4.7 லட்சம் உயிரிழப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன. அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான (1.2 லட்சம்) உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது, பிரேசில் (52,645), இங்கிலாந்து (43,011) ஆகியவை பதிவாகியுள்ளன.

.