இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,050 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 18,55,745 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ஒரே நாளில் 803 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 38,938 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 12,30,509 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 66.30 சதவீதமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,50,196 ஆக அதிகரித்துள்ளது, மேலும் 8,968 புதிய வழக்குகள் இன்று சேர்க்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் தொற்று காரணமாக 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 266 புதிய இறப்புகளுடன், இறப்பு எண்ணிக்கை 15,842 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த மருந்து தயாரிப்பாளர் ஒருவர் இங்கிலாந்து அரசுடன் மில்லியன் கணக்கான கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
தேசிய தலைநகரில் 805 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது கடந்த இரண்டு மாதங்களில் மிகக் குறைவானது, இது தொற்றுநோயை 1,38,482 ஆகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். அங்கு தினசரி 18,000 முதல் 19,000 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் நேற்றைய தினம் 3,505 புதிய தொற்றுநோய்களின் அதிகபட்ச ஒற்றை நாள் ஸ்பைக்கைப் பதிவுசெய்தது. மாநிலத்தில் இப்போது மொத்தம் 70,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,456 கொரோனா தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.
கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, பரிசோதனை முடிவுகளில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனையின்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அனைவரும் அறிகுறிகள் உள்ளதா என்பதை கவனித்து, தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் என்ற அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் பலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் அண்மையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அமைச்சர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
முதல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதம் கேரளாவில் பதிவான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை அடைவதற்கு 186 நாட்கள் எடுத்துள்ளது. 110 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை அடைந்தது. ஜூலை மாதத்தில் மட்டும், 60 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு எண்ணிக்கையும், 50 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்பு எண்ணிக்கையும் பதிவாகியுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம், ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் உள்ளது.