Coronavirus India:இதுவரை வைரஸ் பாதிப்படைந்த 4.76 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- ஒரே நாளில் அதிகபட்சமாக 24,879 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு
- மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 7,67,296 ஆக உயர்வு
- இதுவரை வைரஸ் பாதிப்படைந்த 4.76 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
New Delhi: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 24,879 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 7,67,296 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை வைரஸ் பாதிப்படைந்த 4.76 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல், 21,129 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 487 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, குணமடைபவர்களின் எண்ணிக்கையானது 62.08 ஆக உள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா (30,54,695), பிரேசிலை (17,13,160) தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா (6,603), தமிழகம் (3,756), கர்நாடகா (2,062), டெல்லி (2,033) தெலுங்கானா (1,924) உள்ளிட்ட மாநிலங்களில் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன.
2.23 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்பு எண்ணிக்கையை கொண்ட மகாராஷ்டிரா நாட்டிலே பாதிப்பு எண்ணிக்கை அதிகமுள்ள முதல் மாநிலமாக உள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டிலே அதிக உயிரிழப்பை (198) கொண்ட மாநிலமாகவும் உள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் (64), கர்நாடகாவில் (54), டெல்லியில் (48), மேற்குவங்கத்தில் (23) என்ற அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 6 லட்சத்தை எட்டிய நான்கு நாட்களில் இந்த வாரத்தில் 7 லட்சத்தை எட்டியது. அதேபோல், முதல்முறையாக ஒரே நாளில் அதிகபட்சமாக 24,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு நிலை தொடர்பாக அமைச்சர்கள் குழுவுடன் சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதனிடையே, கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சீரான முறையில் ஒரு நாளைக்கு 500 யாத்ரீகர்கள் என்ற அளவில் அனுமதிக்கப்படும் என்று அரசு நேற்று மாலை அறிவித்துள்ளது.
உலகளவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 1.2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 5.4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.