Coronavirus: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,300ஆக உயர்வு
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 56,300ஆக உயர்வு
- கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 3,390 பேர் பாதிப்பு
- இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 1,275 பேர் உயிரிழப்பு
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 56,300ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 3,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 103 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 1,275 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,273 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது, 29.35 சதவீதமாக உள்ளது. இதுவரை, மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 16,540 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய தினம் டெல்லியில் அதிகபட்சமாக 448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, டெல்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது, 5,980 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கையும் 66 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் இன்று காலை ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த 15 புலம் பெயர் தொழிலாளர்கள் மீது ரயில் ஏறியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு தண்டவாளம் வழியாக திரும்பி வந்துகொண்டிருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையிலிருந்து 360 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் பகுதிக்கு அருகில் உள்ள கர்மத் என்கிற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது, அதிகாலை 5:15 மணியளவில் அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியதாக தெரிகிறது.
கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் நேற்றிரவு இரண்டு சிறப்பு விமானங்கள் மீட்டு வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் கேரளாவில் தரையிறக்கப்பட்டனர். இதில், அபுதாபி மற்றும் துபாயிலிருந்து 363 இந்தியர்கள் வந்தடைந்தனர். தொடர்ந்து, பயணிகள் விமானம் மற்றும் கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விமானங்கள் அழைத்து வந்தன. தொடர்ந்து, அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கர்நாடக அரசு, சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை மாநிலத்தை விட்டு வெளியேறுவதைத் தடுத்து நிறுத்தியதை அடுத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திடீர் திருப்பமாக ஷ்ராமிக் ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதித்தது. ஊரடங்கு கட்டுபாடு தளர்த்தப்பட்டதால், கட்டுமானத் துறைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் தேவை என்று கூறி ரயில்களை அரசு நிறுத்தியதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் எந்தவொரு புலம்பெயர் தொழிலாளர்களும் நடந்தே வீடு திரும்பிச் செல்ல நிர்பந்திக்கப்படாமல் இருக்க வேண்டும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, மாநில அரசு "அவர்களை பாதுகாப்பாக திரும்ப அழைத்து வருவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது" என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.