ஹைலைட்ஸ்
- கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 52,952ஆக உயர்வு
- கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,561 பேர் பாதிப்பு
- உயிரிழப்பு எண்ணிக்கை 1,783 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 52,952ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,561 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 1,783 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மும்பை, டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி, 28.71 சதவீதமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 15,267 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
நாட்டிலே அதிகம் பாதித்த பகுதியாக மகாராஷ்டிரா உள்ளது. இதுவரை அங்கு 16,758 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, குஜராத்தில் 6,625 பேரும், டெல்லியில் 5,532 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் உள்ள 25,000 தனியார் மருத்துவர்கள், கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு உடனடியாக அறிக்கை அளிக்குமாறு மகாராஷ்டிரா அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்றும், அவசரக்காலத்தில் பணியாற்றுவதற்காக ஊதியம் வழங்கப்படும் என்றும் மாநில அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று ஒரே நாளில் 428 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது டெல்லியில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வை கண்டது. நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 52,000ஐ தாண்டியது.
கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், குறைந்த அளவிலே சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்துப் போராடும் முன்னணி தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட கவலைக்குரிய நிகழ்வுகள் மேற்கு வங்கத்தில் உள்ளன என்று உள்துறை அமைச்சகம் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
பீகாரில் உணவு விநியோகம் தொடர்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இடையே ரயிலுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்த ரயில் மகாராஷ்டிராவின் கல்யாணில் இருந்து சுமார் 1,200 புலம்பெயர் தொழிலாளர்களுடன் புறப்பட்டது.