Coronavirus Cases, India: மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 2,206 ஆக அதிகரித்துள்ளது.
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,000ஐ தாண்டியது
- கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், அதிகபட்சமாக 4,213 பேர் பாதிப்பு
- மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 2,206 ஆக அதிகரிப்பு
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 67,100ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், அதிகபட்சமாக 4,213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 2,206 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அதன் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், நாளை முதல் குறிப்பிட்ட அளவு பயணிகள் ரயில் இயங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான முன்பதிவுகள் இன்று முதல் தொடங்குகின்றன. கடந்த மார்ச்.25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல், ரயில் போக்குவரத்தும் முடங்கியது. இதைத்தொடர்ந்து, தற்போது 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் டெல்லியில் இருந்து, அசாம், மேற்குவங்கம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஜம்மு, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஓடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஊரடங்கு குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க உள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கடந்த மார்ச்.25ம் தேதி தொடங்கியதிலிருந்து ஐந்தாவது முறையாக மாநில முதல்வர்களை பிரதமர் சந்திக்க உள்ளார். இந்த ஆலோசனையின் போது, தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் குறித்து மாநிலங்கள் விவாதிக்க வாய்ப்புள்ளது.
வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவரும் பணிகளை பயணிகள் விமானமும், இந்திய கடற்படை போர்க்கப்பல்களும் மேற்கொண்டு வருகிறது. இந்த மீட்பு பணியின் 5வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் கேரளா திரும்பிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் விகிதம் 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதால் கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்றைய தினம் தெரிவித்தார். அவை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, கோவா, ஜம்மு-காஷ்மீர், லடாக், மணிப்பூர், ஒடிசா, மிசோரம் மற்றும் புதுச்சேரி என்று அவர் கூறியிருந்தார். தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி, மீட்பு விகிதம் 31.14 சதவீதமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று ஒருநாள் மட்டும், 1,278 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து,
அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 22,000ஐ தாண்டியது. இதுவரை 800 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மும்பையில் மட்டும் 13,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட அங்குமட்டும் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 669 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மாநிலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக தற்போது தமிழகம் உள்ளது. இதுவரை இங்கு 7,200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகளவிலான பாதிப்பானது சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து உருவாகியுள்ளது.
தொடர்ந்து, தமிழகத்தில் இன்று நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 34 வகையான கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து விளக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் உள்ள தனிக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் இன்று முதல் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காய்கறி, மளிகை கடைகள் இன்று முதல் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரையும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மளிகை கடைகள் செயல்படலாம் என தெரிவித்துள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட 75 சதவீத கொரோனா தொற்று நோயாளிகளுக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை அல்லது லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன என்று கூறிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "கொரோனா வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.