நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4,25,282 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,74,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,37,196 பேர் குணமடைந்துள்ளனர். 13,699 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 14,821 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும். அதே போல 445 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது டெல்லியானது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் தேசிய அளவில் தமிழகத்தை பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி ஆளுநருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். இதில், "வலுவான" தொடர்புத் தடமறிதல், முழு கட்டுப்பாட்டு மண்டல மூலோபாயத்தையும் புதுப்பித்தல் மற்றும் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சேவைகளை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு மரணத்தையும் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று தில்லி அரசிடம் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 60 ஆயிரத்தினை நெருங்கியுள்ளது. தற்போது 59,746 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 3,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,870 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,32,075 ஆக உயர்ந்துள்ளது. அதே போல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கடந்த 24 மணி நேரத்தில் 101 ஆக உள்ளது. இதனால் ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 6,170 ஆக அதிகரித்துள்ளது. வர்த்தக தலைநகரான மும்பையை பொறுத்த அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 66,488 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தமாக மாநில அளவில் இதுவரை 60 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் விகிதமானது 49.78 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்த அளவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். 2,352 பேருக்கு கொரோனா நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 5வது நாளாக 2,000க்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 59,377 ஆக அதிகரித்துள்ளது.
தெலுங்கானாவை பொறுத்த அளவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 730 பேர் தொற்றால் பாதிக்கப்ட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தொற்று பாதித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 7,802 ஆக அதிகரித்துள்ளது. மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனையில், 30 முதுகலை மருத்துவர்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர். வேலை பளு அதிகமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதே போல தெலுங்கானாவின் ஒரே COVID-19 சிகிச்சை மருத்துவமனையின் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் எண்ணிக்கையை பரவலாக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கர்நாடகாவை பொறுத்த அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 453 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 9,000ஐ கடந்துள்ளது. இதுவரை 137 பேர் மாநிலம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவை பொறுத்த அளவில் தொடர்ச்சியாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இம்மாநிலம் முழுவதும் 133 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவற்றில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளனர். 43 பேர் வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ளனர். ஒன்பது உள்ளூரில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது கேரளாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 89.5 சதவிகிதத்தினர் வெளிநாடுகளிலிருந்தோ அல்லது பிற மாநிலங்களிலிருந்தோ திரும்பியவர்களாவார்கள். இதர 10.5 சதவிகிதத்தினர் உள்ளூரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.
சர்வதேச அளவில் 4.68 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 89.44 லட்சம் மக்கள் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 305 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தற்போது நான்காவது நாளாக 400க்கும் குறைவான இறப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளது.