বাংলায় পড়ুন Read in English
This Article is From May 18, 2020

ஒரே நாளில் நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! முழு விவரம்!!

தற்போது 96,169 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,029 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர்

Advertisement
இந்தியா
New Delhi :

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 96 ஆயிரத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,242 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னெப்போதையும் விட இது அதிக எண்ணிக்கையாகும். இதன் மூலமாக தற்போது 96,169 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,029 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நான்காவது முறையாக முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையானது நாட்டில் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

  • நாட்டில் மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவு தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இதையடுத்து குஜராத், தமிழ்நாடு  மற்றும் டெல்லி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை பொருத்த அளவில், 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,347 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக இம்மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.
  • தேசிய அளவில் ஒட்டு மொத்தமாக இதுவரை 36,824 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் விகிதமானது 38.27 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • நீட்டிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா தொற்று அதிகம் உள்ளதாக வரையறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. அதே போல மற்ற பகுதிகளில் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் இயங்க அனுமதியளித்துள்ளது. ஆனால், மெட்ரோ ரயில்கள், விமான போக்குவரத்துகள் போன்றவற்றிற்கும், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள், போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் விதிக்கப்பட்ட தடைகள் நீட்டிக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
  • தேசிய தலைநகர் டெல்லியை பொருத்த அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10 ஆயிரத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இப்பகுதியில் 721 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் “டெல்லி அரசு முன்வைத்த பரிந்துரைகள், மத்திய அரசால் வழிகாட்டுதல்களாக வழங்கப்பட்டுள்ளது“ என கூறியுள்ளார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு மாநில அரசுகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 73 வது உலக சுகாதார சபை (WHA) கூட்டத்தில் முன்மொழியப்பட்ட வரைவுத் தீர்மானத்தின்படி, கொரோனா தொற்றுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO)  அளித்த பதில் குறித்து சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிக்கு இந்தியா உட்பட 62 நாடுகள்  ஆதரவளித்துள்ளன.
  • தமிழகத்தினை பொருத்த அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 11,224 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலமாக தமிழகத்திற்கு திரும்பியவர்களில் 174 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையின் மூலமாக 2,600 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 
  • வடகிழக்கு மாகாணங்களில், அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 100 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒன்பது வயது குழந்தை மற்றும் டெல்லியிலிருந்து திரும்பிய மாணவர்கள் என ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அதேபோல மத்தியப் பிரதேசத்தில், குவைத்திலிருந்து திரும்பியவர்களில் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இம்மாநிலத்தில் 4,977 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 248 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 47,14,240 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல 3,15,191 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 90 ஆயிரத்தினை நெருங்கிக்கொண்டிருக்கிறது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தின் அம்சங்களை ஐந்தாவது நாளாக செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டிருந்தார். இதில் மாநிலங்களுக்கான கடன் பெறும் வரம்பை நீட்டிப்பது, மகாத்மாக காந்தி ஊரக வேளை திட்டத்திற்கான நிதியினை அதிகரிப்பது, தனியாரை அனைத்து துறைகளிலும் அனுமதிப்பது, கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிக அளவில் மாற்றங்கள் போன்றவற்றை அறிவித்திருந்தார்.
Advertisement