தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,12,359 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5,609 ஆக உயர்ந்துள்ளது. 132 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,435 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர். 63,624 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று 39.62 என்ற விகிதத்திலிருந்து இன்று 40.31 என்கிற விகிதத்திற்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் உள்நாட்டு விமான மற்றும் ரயில் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 லட்சத்தினை கடந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 3.25 லட்சமாக அதிகரித்துள்ளது.
- கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட முழு முடக்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் அனைத்து போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக விமான போக்குவரத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில் மே 25 முதல் குறிப்பிட்ட இடங்களுக்கான உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படும் என விமான துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆனால், சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்படுகிறது.
- விமான நிறுவனங்கள் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதலின்படி விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. தனி மனித இடைவெளி, பயணத்திற்கு முன்பாக பரிசோதிக்கப்படுதல், மற்றும் அணைத்து விமான பயணிகளும் கட்டாயம் ஆரோக்ய சேது செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டும் என விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. அதே போல விமானத்தில் நடு இருக்கைகள் காலியாக விடுவது குறித்த யோசனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கைகள் காலியாக விடப்படும் பட்சத்தில் பயணிகளுக்கான கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
- ரயில் போக்குவரத்தினை பொறுத்த அளவில், பயணிகளுக்கான 200 ரயில்கள் முதல்கட்டமாக ஜூன் 1 முதல் துவங்க உள்ளது. இதற்கான முன்பதிவு ஐஆர்சிடிசி-யில் மட்டுமே பெற முடியும். இன்று காலை 10 மணி முதல் இதற்கான முன்பதிவு துவக்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயில் குளிர்சாதன பெட்டிகள், குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகள் என இரண்டையும் கொண்டிருக்கும். பயணத்திற்கு முன்பாக அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் . தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டணம் திருப்பி செலுத்தப்படும். மேலும், ஆரோக்ய சேது செயலியை தரவிறக்கம் செய்வதை ரயில்வே கட்டாயமாக்கியுள்ளது.
- மேற்கு வங்கத்தினை பொறுத்த அளவில், நேற்று மாலை முதல் இரவு வரை ஆம்பன் புயல் கரையை கடந்ததில் பெருத்த சேதத்தினை மாநிலம் சந்தித்துள்ளது. புயல் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தடுப்பு மற்றும் புயல் காரணமாக மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல். இதில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க செய்தல் என இரு வேறு சாவல்களை மாநிலம் எதிர்கொண்டது. ஆம்பன் புயல் காரணமாக மாநிலம் முழுவதும் 1 லட்சம் கோடி அளவிலான பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். தற்போது மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்றால் 3,103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 253 பேர் உயிரிழந்துள்ளனர்.
- சர்வதேச அளவில் ஒரு லட்சம் பேரில் 62 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் இதன் எண்ணிக்கையானது 7.9 என்கிற அளவில்தான் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே போல உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையிலும் சர்வதேச அளவைக்காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது. அதாவது கொரோனா தொற்றால் உலக அளவில் 4.2 சதவிகித மக்கள் உயிரிழக்கக்கூடிய நிலையில் இந்தியாவில் 0.24 என்கிற அளவில்தான் உயிரிழப்பு உள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையானது 7.1 என்கிற விகிதத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்த விகிதமானது 40.31 என்கிற அளவில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கபடப்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மூன்று ஒரு பங்காகும். மகாராஷ்டிராவில் இதுவரை 1,390 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக தமிழகம்(13,191) மற்றும் குஜராத்(12,537) அதிக அளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கொண்டுள்ளது. தமிழகத்தில் 87 பேர் உயிர் இழந்திருக்கின்றனர். குஜராத்தில் இதுவரை 749 பேர் உயிரிழந்துள்ளனர்.
- உத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து குறிப்பிட்ட பயணிகளுடன் அனுமதிக்கப்படுகிறது. கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளன. இனிப்பு கடைகள் மற்றும் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும், டெல்லி நொய்டா எல்லையை உ.பி மாநில அரசு சீல் வைத்துள்ளது. பிரின்ட்டிங் பிரஸ் மற்றும், பூங்காக்களை திறக்க மாநில அரசு அனுமதித்துள்ளது.
- 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான(CBSE) பொது தேர்வினை நடத்த அனுமதியளிக்கபடப்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகளை மாநில அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணவர்கள் தேர்வு அறைகளில் முககவசங்களோடு நுழைய வேண்டும். பள்ளிகள் இதர சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 லட்சத்தினை கடந்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் 91 லட்சமாக உலகம் முழுக்க தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த போது, அதில் மூன்றில் ஒரு பங்கினை லத்தின் அமெரிக்க நாடுகள் கொண்டிருந்தன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இதில் 20 சதவிகித எண்ணிக்கையை கொண்டிருந்தன. தற்போது பிரேசிலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- சீனாவில் வடக்கும் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் தென்படுவதில் தாமதம் ஏற்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த தொற்றானது கண்டறிய முடியாத வகையில் மாறக்கூடும் என எச்சரித்துள்ளது. தொற்றுக்கான அறிகுறிகளை கண்டறிய நீண்ட நேரம் தேவைப்படுவதாக சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.