This Article is From Apr 04, 2020

இந்தியாவில் கொரோனா தொற்றால் 62 பேர் மரணம்: முக்கியத் தகவல்கள்

இந்தியாவில், 2547 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த தொற்றால் 62 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் 62 பேர் மரணம்: முக்கியத் தகவல்கள்

தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 163 பேர்

ஹைலைட்ஸ்

  • கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு!
  • வைரஸ் தொற்று பாதிப்புக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • மொத்தமாக 157 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
New Delhi:

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு சர்வ தேச அளவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் தொற்று. 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இந்த தொற்று காரணமாக மரணமடைந்துள்ளனர்.

இந்தியாவில், 2547 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த தொற்றால் 62 பேர் இறந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 163 பேர். நேற்று மட்டும் 478 புதிய தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உலக வங்கியானது, இந்தியா கொரோனா தொற்றினை எதிர்கொள்ள 1 பில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் இரண்டாவது முறையாக நேற்று மக்களிடையே உரையாற்றினார். மக்கள் ஏப்ரல் 5 அன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்தி, அல்லது டார்சுகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த முக்கியத் தகவல்கள்:

  1. டெல்லியின் நிஜாமுதின் பகுதியில் இஸ்லாமிய மத பிரச்சாரக் கூட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பங்கேற்ற வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மூலமாக தொற்றானது இதில் பங்கேற்ற பெரும்பாலானோருக்கு பரவியதாக கருதப்படுகிறது. எனவே இந்த கூட்டத்தில் பங்கேற்ற அத்துணை பேரையும் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உத்தரப் பிரதேச காசியாபாத் நகரில் டெல்லி நிகழ்வில் பங்கேற்றுவிட்டு திரும்பிய நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இதில் சிலர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விரும்பதாகாத வகையில் நடந்துக்கொண்டாதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே இதற்குக் காரணமானவர்கள் மீது ஐபிசி பிரிவு 354, 294, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமானால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமென அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளானோர்கள் மனிதக் குலத்தின் எதிரிகள் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
  2. நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த கொரோனா தொற்று சங்கிலியை உடைப்பதற்கு சமூக விலகலே சரியான மருந்து என்றும், எனவே யாரும் அவசியமில்லாமல் வெளியில் வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த விதிகளை மீறுபவர்கள் ஓராண்டு அல்லது ஈராண்டு வரை சிறை தண்டனையை அனுபவிப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
  3.  கொரோனா தொற்று அதிகரித்துள்ள பெருநகர் புறங்களாக மும்பை (179) டெல்லி (152) பெங்களூரு (52), புனே (49) மற்றும் ஹைதராபாத் (44) ஆகியவையும், பெருநகர் புறம் அல்லாதவையாக காசர்கோடு (115), கண்ணூர் (49) உத்தரப்பிரதேசத்தின் ஜிபி நகர் (45), அகமதாபாத் (33), ஜெய்ப்பூர் (32) ஆகியவை உள்ளன. மாநில அளவில்  மகாராஷ்டிரா (339), தமிழ்நாடு (309) மற்றும் கேரளா (286) ராஜஸ்தான் (133) ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  4. தில்ஷாத் கார்டன், நிஜாமுதீன், நொய்டா, பில்வாரா, காசர்கோடு, பதானம்திட்டா, கண்ணூர், மும்பை, புனே, இந்தூர், ஜபல்பூர், அகமதாபாத், லடாக் மற்றும் யவத்மால் ஆகியவை நாட்டின் பிரதான தொற்று பரவல் மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  5. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைவாழ் பகுதியான மும்பையின் தாராவி பகுதியில் 35 வயதான மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து சதுர கிலோமீட்டர் குடிசைவாழ் பகுதியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழந்து வருகிறார்கள். இந்த பகுதியில், சுகாதார சீர்கேடுகள் அதிகம் உள்ளது. பொதுக் கழிப்பறைகள் மற்றும் நெரிசலான குடிசைகள் தொற்று பரவும் அபாயத்தினை அதிகரித்திருக்கின்றன.  இந்த பகுதிகளில் தொற்று பரவலை அடையாளம் காண்பது மிகப் பெரிய சவாலான பணியாகும்.
  6. ஆந்திராவில் பதிவாகியுள்ள 161 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில்140  பேர் டெல்லி இஸ்லாமிய நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மார்ச் 30 அன்று மரணமடைந்த 55 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. அவரின் மகன் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பியவராவார். அவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
  7. தேசிய தலைநகர் டெல்லியில் எம்ய்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய மனைவி ஒன்பது மாத கர்ப்பிணியான மருத்துவராவர். இருவருக்கும் பயண வரலாறு ஏதும் இல்லை என தெரிய வருகின்றது. மேலும் டெல்லியில் 7 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பணிபுரிகின்றனர்.
  8. கொரோனா தொற்றினை சமாளிக்க உலக வங்கியானது 1.9 பில்லியன் டாலர் நிதியினை 25 நாடுகளுக்கு வழங்க முன்வந்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்கவும், புதிய தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை அமைக்கவும் இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர் வழங்கப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் (200 மில்லியன் டாலர்), ஆப்கானிஸ்தான் (100 மில்லியன் டாலர்) மற்றும் இலங்கை (128.6 மில்லியன் டாலர்) ஆகிய தெற்காசிய நாடுகளுக்கும் உலக வங்கி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
  9. வியாழக்கிழமை பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடலை மேற்கொண்டார். அதில், முழு முடக்க (lockdown) நடவடிக்கைக்குப் பிறகு மக்கள் புழக்கங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இதில் கலந்துரையாடினார்.
  10. சர்வ தேச அளவில் கொரோனா தொற்றால் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த தொற்று காரணமாக 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மரணமடைந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மிக மோசமானதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 6,000 பேர் இறந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், சுமார் 85 சதவிகித அமெரிக்கர்கள் முடங்கியுள்ளனர் என்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
.