Coronavirus Cases, India: இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 1.18 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,088 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 3,583 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நாட்டில் 66,330 பேர் கொரோனா வைரஸூக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், பாதிக்கப்பட்டவர்களில் 48,534 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 40.97 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து, அதிகரித்து வருகிறது. செவ்வாய்கிழமையன்று 5,611, புதன்கிழமையன்று 5,609 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடைய, கட்டுப்பாடுகளுடன் உள்நாடு விமான போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நான்காவது கட்ட ஊடரங்கில் கட்டுப்பாடுகளுடன், மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, ரயில்வேயும் குறிப்பிட்ட அளவில் பயணிகள் ரயிலை இயக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஒரு லட்சத்தினை கடந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 ஆயிரத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,345 பேர் புதியதாக இம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன்
மூலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 41,642 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,382 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மும்பையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் திங்கள் முதல் உள்ளூர் விமானப் போக்குவரத்து தொடங்கப்படவுள்ள நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதே கட்டணத்தை விமான நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும்
என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 7 வகைகளாக விமானங்கள் பிரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்பட உள்ளது. இதில் குறைந்தபட்சமாக ரூ.2,000 முதல் அதிகபட்சமாக 18,600 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.