தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 1,38,845 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,977 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 154 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 4,021 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக 57,720 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல தற்போது 77,103 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 196 நாடுகளில் இந்தியா முதல் பத்தாவது இடத்தில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முழு முடக்க நடவடிக்கையை பல தளர்வுகளோடு நீட்டித்த பின்னர் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்து வருகின்றது. இரண்டு மாதங்களாக பெரும் நெருக்கடியிலிருந்த விமான போக்குவரத்து தற்போது மறுதொடக்கம் செய்யப்பட்டு உள்நாட்டு சேவையில் மட்டும் அனுமதிக்கப்படுகின்றது.
- சர்வதேச அளவில் அதிக அளவு கொரோன பாதிப்புக்கு உள்ளான அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது 10வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா தொற்றின் மையமாக உருவெடுத்துள்ளது. இந்நாட்டில் 16 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கின்றது.
- இந்தியாவை பொறுத்த அளவில் கடந்த நான்கு நாட்களாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளொன்றுக்கு 6,000 என உயர்ந்து வருகின்றது. பல தளர்வுகளோடு மூன்றாவது முறையாக முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ள இக்காலகட்டங்களில், கடந்த திங்களன்று 5,242 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டனர். பின்னர் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அடுத்தடுத்ததாக முறையே 5,611 மற்றும் 6,088 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் சனிக்கிழமை 6,654 பேருக்கும், நேற்று 6,767 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
- கொரோனா தொற்று பரவலுக்கிடையில் நாடு முழுவதும் ஈகை பெருநாள் கொண்டாட்டம் கலையிழந்து காணப்படுகின்றது. அனைத்து மசூதிகள் மற்றும் பள்ளி வாசல்களில் தொழுகை ரத்து செய்யப்பட்டு இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவில் தொற்றால் பாதிக்ப்பட்ட மக்களை கொண்டுள்ள மாநிலமாக உள்ளது. நேற்று 3,041 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 ஆயிரத்தினை கடந்துள்ளது.
- இரண்டு மாதங்களுக்கு பின்னர் நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்து இன்று முதல் செயல்பட தொடங்குகின்றது. பயணிகள் முககவசம் மற்றும் சுகாதார பாதுகாப்பு கவசங்களோடு தங்கள் பயணங்களை தொடங்கியுள்ளனர். விமான ஊழியர்கள் பாதுகாப்பு உடைகளை அணிந்துள்ளனர். மத்திய அரசானது உள்நாட்டு விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் அவசியமில்லை என அறிவித்திருந்தது. ஆனால், பாஜக ஆளக்கூடிய மாநிலங்கள் உட்பட பல மாநில அரசுகள் விமான பயணிகளை தனிமைப்படுத்தலுக்கு கட்டாயமாக அனுப்புவதால் பயணிகள் சற்று குழப்பமடைந்துள்ளனர்.
- விமான பயணிகள் அனைவரும் கட்டாயமாக ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. பயணிகள் பயணத்திற்கு முன்பாக உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவித்துள்ளது.
- அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையில் 10 ஆயிரம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் ஆம்பன் புயல் காரணமாக சேமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
- நாட்டில் அதிகபட்ச தொற்று எண்ணிக்கை கொண்ட மாநிலங்களின் வரிசையில் இரண்டாவதாக உள்ள தமிழகத்தில், இரண்டு மாதங்களுக்கு பிறகு மாநில தலைநகரான சென்னையில் 17 பெரிய தொழிற்பேட்டைகள் செயல்பட தொடங்கியுள்ளன.
- இந்தியாவை சேர்ந்த 14 கொரோனா தொற்று தடுப்பு மருந்துகளில், அடுத்த நான்கு ஐந்து மாதங்களுக்குள் பரிசோதனைக்கு வரக்கூடும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் தெரிவித்துள்ளார். 100க்கும் அதிகமான நிறுவனங்கள் தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளன. இவற்றை உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைக்கின்றது என வர்தன் கூறியுள்ளார். மேலும், தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்றாலும், அவ்வாறு கண்டுபிடிப்பதற்கு குறைந்தது ஒரு வருடம் தேவைப்படும் என அவர் கூறியுள்ளார்.
- உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 54 லட்சத்தினை கடந்துள்ளது. 3.4 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.