This Article is From Mar 31, 2020

கொரோனா தொற்று: டெல்லி மதக் கூட்டத்தில் கலந்து கொண்ட 6 பேர் உயிரிழப்பு!

Coronavirus: டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக்-இ-ஜமாத் கூட்டத்திற்கு பின்னர், 1,400 பேர் வரை தொடர்ந்து அங்கு தங்கியுள்ளனர்.

கொரோனா தொற்று: டெல்லி மதக் கூட்டத்தில் கலந்து கொண்ட 6 பேர் உயிரிழப்பு!

Coronavirus: பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • 2,000க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
  • டெல்லியில் 300க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதி
  • கூட்டத்தில் கலந்துகொண்ட அந்தமானை சேர்ந்த 9 பேருக்கு பாதிப்பு உறுதி
New Delhi/Hyderabad:

டெல்லி நிஜாமுதீனில் உள்ள மசூதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தெலுங்கானாவை சேர்ந்த 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மதகுரு கடந்த வாரம் ஸ்ரீநகரில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மார்ச் மாதத்திற்கு நடுவே முஸ்லீம் மத அமைப்பான தப்லீக்-இ-ஜமாத் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக்-இ-ஜமாத் கூட்டத்திற்கு பின்னர், 1,400 பேர் வரை தொடர்ந்து அங்கு தங்கியுள்ளனர். இந்த கூட்டம் நடந்த முடிந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில், மார்ச்-24ம் தேதியன்று 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதையடுத்து, அந்த மதக் கூட்டத்தில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்டோருக்கு டெல்லியில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அந்தமானை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயிரிழந்தோருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டம் முடிந்த பின்னர், தெலுங்கானாவுக்கு சென்ற இந்தோனேசியாவை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி மதக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அதிகளவிலான மக்களுக்கு தொற்று அறிகுறி இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, டெல்லி சிஆர்பிஎஃப் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் ஞாயிறன்று அந்த மசூதி அமைந்துள்ள பகுதிக்கு விரைந்தனர். 

இதையடுத்து, அங்கு வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக அச்சுறுத்தல் எழுந்ததால், அந்த பகுதி சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மதகுரு மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, கடந்த மார்ச்.24ம் தேதி முதல் அந்த கட்டிடத்தில் தங்கியுள்ளவர்களை வெளியேற்ற முயற்சித்து வருகிறோம். எனினும், நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பலர் அங்கே சிக்கித் தவித்து வருவதாக் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டம் முடிந்த பின்னர் அதில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் 20-30 பேருந்துகளில் கலைந்து சென்றுள்ளனர் என்ற தகவல்கள் மிகுந்த கவலை அளிக்கிறது. 

இந்தியாவில் இதுவரை 1,200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் பாதிப்புக்கு 32 வரை உயிரிழந்துள்ளனர்.

.