இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்தை கடந்தது; 57,542 பேர் உயிரிழப்பு!
New Delhi: இந்தியாவில் கடந்த 24 நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 61,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 31,06,348ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 836 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 57,542 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 23,38,035 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 75.27 சதவீதமாக உள்ளது.
நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவிலான (6,82,383), பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகம் (3,79,385), ஆந்திர பிரதேசம் (3,53,111), கர்நாடகா (2,77,814), உத்தர பிரதேசம் (1,87,781) மற்றும் டெல்லி (1,61,466) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் 10,441 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1,450 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1.61 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையானது 4,300 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில், டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையை சோதனை அடிப்படையில் படிப்படியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.