இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 69,652 பேர் கொரோனாவால் பாதிப்பு!
New Delhi: இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 69,652 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 28,36,926ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 20.96 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 73.90 சதவீதமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 977 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 53,866ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலத்தில் மகாராஷ்டிரா (6,28,642), முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம் (3,55,449), ஆந்திரா (3,16,003), கர்நாடகா (2,49,590), உத்தர பிரதேசம் (1,67,510) மற்றும் டெல்லி (1,56,139) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 13,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்றைய தினம் கொரோனா வைரஸால் புதிதாக 5,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,55,449 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 1,186 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகம் பதிவாகி வரும் ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3.16 லட்சம்ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் தற்போது நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட 11,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அங்கு மொத்தமாக 1.56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குவங்கத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு குறித்து பலராலும் கேள்வி எழுப்பட்ட போதும், அரசு இது விஞ்ஞானப்பூர்வ ஆராய்ச்சிகளுக்கு பின்னர் வகுக்கப்பட்ட திட்டம் என்று குறிப்பிட்டுள்ளது.
இதுவரை கொரோனா வைரஸூக்கு 3.26 கோடி மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று ஒரு நாளில் 9.18 லட்சம் மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
கொரோன வைரஸ் பாதிப்பால் உலகளவில் 7.87 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2.23 கோடி பேர் வரை தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.