ஹைலைட்ஸ்
- நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கையானது 7,42,417 ஆக அதிகரித்துள்ளது
- 2,64,944 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
- 20,642 பேர் உயிரிழந்துள்ளனர்
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 7,42,417 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,64,944 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,56,831 பேர் குணமடைந்துள்ளனர். 20,642 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 22,752 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 482 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதம் 61 சதவிகதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 1,04,73,771 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2,62,679 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
தேசிய அளவு கொரோனா தொற்றில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் குடிசைவாழ் பகுதியான தாராவியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. 2.5 சதுர கி.மீ பரப்பளவில் ஏறத்தாழ 6.5 லட்சம் மக்கள் வசிக்கும் இப்பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தேசிய வர்த்தக தலைநகரான மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 785 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மும்பையின் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 86,509 ஆக அதிகரித்துள்ளது. இதே போல கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 64 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமா ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளது.
அசாம் மாநிலத்தினை பொறுத்த அளவில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மாறுபட்ட முடிவுகளை மேற்கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ சங்கம், மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அசாம் மாநிலத்தில் கொரோனா வார்டுகளில் 11 நாட்கள் தொடர்ச்சியாக மருத்துவர்களையும் செவிலியர்களையும் ஈடுபடுத்தும் போக்கினை கைவிட வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட COVAXIN மற்றும் ZyCov-D மருந்துகளை மனிதர்கள் மீது பரிசோதிப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் ஆறு லட்சம் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பின்னர் அடுத்த ஐந்து நாட்களில் இந்த எண்ணிக்கையானது 7 லட்சமாக உயர்ந்துள்ளது.