இந்தியாவில் எந்த அறிகுறியும் இல்லாமல் 80% பேருக்கு கொரோனா தொற்று!
ஹைலைட்ஸ்
- It is difficult to detect asymptomatic cases, says Top scientist
- There is no other way to detect them than contact-tracing, he added
- India has reported over 17,000 coronavirus cases so far
New Delhi: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள் அல்லது, நோய்த்தொற்று அறிகுறிகள் வெளிப்படாதவர்கள் என்றும், இது கவலைக்குரிய விஷயம் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஒருவர் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த மூத்த விஞ்ஞானி கங்காகேத்கர் கூறும்போது, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேர் எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் ஆவார்கள். அதனால், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தொடர்பு தடமறிதலை (contact-tracing) தவிர வேறு வழியே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 543ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இன்னும் கண்டறியப்படாத பல அறிகுறியற்ற நபர்கள் இருக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
இது தொடர்பாக கங்காகேத்கர் கூறும்போது, அறிகுறி இல்லாதவர்களை கண்டறிவது என்பது மிகவும் கடினமானது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் தொடர்புகளை தடமறிந்த பின்னரே அவர்களை கண்டறிய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
பாதிப்பு எண்ணிக்கையானது அவ்வளவு அதிகமாக இருக்காது. மே இரண்டாவது வாரத்தில், அதனை சிறந்த முறையில் மதிப்பீடு செய்யும் நிலையில் நாம் இருப்போம் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம், அறிகுறிகள் தென்படாதவர்களிடம் கொரோனா இருப்பதை கண்டறிய சோதனை முறையில் மாற்றம் இருக்குமா? என கேள்வி எழுப்பியபோது, என்ன மாற்றம் செய்யலாம்? அதற்கான வாய்ப்புகள் இல்லை.
ஹாட்ஸ்பாட் பகுதிகளில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்க்கான (ILI) சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அறிகுறிகளே இல்லாதவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் 736 பேரிடம் இருந்து சேகரிப்பட்ட மாதிரியில், 186 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் யாருக்கும் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது என்பது தெரியாமல் அதனுடன் வலம் வருவார்கள் என்று அவர் கூறினார்.