New Delhi: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 83,341 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1,096 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த முழுமுடக்க நடவடிக்கையானது சமீபத்தில் மிக தாராளமாக தளர்த்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 83,341 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த எண்ணிக்கையானது, 39,36,748 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8,31,124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 30,37,152 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையானது 68,472 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பரிசோதனைகளை பொறுத்த அளவில், நாடு முழுவதும் இதுவரை 4,66,79,145 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 11,69,765 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதமானது 77 சதவிகிதம் என்கிற அளவில் உள்ளது. அதே போல உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 70 சதவிகிதத்தினை மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.