COVID-19 Cases, India: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,000ஐ நெருங்குகிறது
- கடந்த 24மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,396 பேருக்கு கொரோனா பாதிப்பு
- உயிரிழப்பு எண்ணிக்கையானது 872 ஆக அதிகரித்துள்ளது.
New Delhi: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,396 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 27,892ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கையானது 872 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், நேற்று ஒரேநாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பால் 48 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 9 மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. அதேபோல், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், அடுத்தடுத்த கட்டங்களாக கட்டுபாடுகளை தளர்த்தும்போதும், எவ்வாறு அதனை செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் முதல்வர்களுடன் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே, ஏப்.20ம் தேதி முதல் குறிப்பிட்ட சில துறைகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது குறித்தும், சோதனை கருவிகள் மற்றும் மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் பிரதமருடன், முதலமைச்சர்கள் விவாதிக்க வாய்ப்புள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் இடம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து, உணவில்லாமல், தங்குவதற்கு இடமும் இல்லாமல் தவித்து வரும் நிலையில், அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டு பாதிப்பு இல்லாத பட்சத்தில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
ஊரடங்கு அறிவிகப்பட்டுள்ள இந்த நேரத்தில், அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு இ-வணிக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடியிருப்பு பகுதிகளில் உள்ள அத்தியாவசியமற்ற கடைகளையும திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, அந்நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
நாடு முழுவதும் 283 மாவட்டங்களில் இதுவரை ஒரு கொரோனா பாதிப்பு கூட ஏற்படவில்லை என அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், 64 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டதட்ட 68 சதவீத கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 மாவட்டங்களில் இருந்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அதிக பாதிப்பு கொண்ட மாவட்டங்களால், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், மத்திய பிரதசேம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் இதுவரை 3,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களில் மட்டும், இரண்டு மருத்துவமனைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
சீனாவின் வுஹான் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் உருவெடுத்த இந்த வைரஸ் பாதிப்பால், உலகளவில் 2 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட, 30 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள், அதிலிருந்து மீண்டு வந்தாலும், மீண்டும் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாது என்பது உறுதி கிடையாது என கடந்த சனிக்கிழமையன்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது.