நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2,86,579 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,37,448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,41,029 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல 8,102 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 9,996 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவாக 357 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பரிசோதனைகளை பொறுத்த அளவில் இதுவரை 52,13,140 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,51,808 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுவரை பதிவாகியுள்ள மொத்த உயிரிழப்புகளில் அதிகபட்ச உயிரிழப்புகள் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்த 8,102 பேரில் 3,483 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களாவார்கள்.
கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,254 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 94 ஆயிரத்தினை கடந்துள்ளது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையை பொறுத்த அளவில் 52,667 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,857 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்ரே அரசு, மாநிலத்தில் கொரோனா சமூகத் தொற்றாக பரிணமிக்கவில்லை என்று உறுதியாக கூறுகின்றது. மேலும், 3T கொள்கை - ஆக்கிரமிப்பு தடமறிதல், சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மூலமாக ஒவ்வொரு தொற்று நோயாளியையும் கண்டறிந்து வருவதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
தேசிய தலைநகரான டெல்ல தேசிய அளவில் தொற்று பாதித்த மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், டெல்லியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் “டெல்லியில் உள்ள கொரோனா தொற்று நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என கண்டறிய முடியவில்லை. சமூக பரவல் உள்ளதா இல்லையா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும்“ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 11 ஆயிரத்தினை கடந்துள்ளது. இதுவரை 321 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய அளவில் ஒட்டுமொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது சமீபத்தில் அதிகரித்து வருகிறது.
சர்வதேச அளவில் பல நாடுகளில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு தொற்று பரவலின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போது உலகம் முழுவதும் 74 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு பிறகு இந்தியா தொற்று பாதித்த நாடுகளின் வரிசையில் ஐந்தாவதாக உள்ளது.