This Article is From Apr 03, 2020

இஸ்லாமிய நிகழ்ச்சியில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்கள் தடுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்

தப்லீக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி நாட்டைச் சேர்ந்த 1300க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்றும், அதில் 960 பேர் தடுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய நிகழ்ச்சியில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்கள் தடுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்

அமித் ஷாவின் அலுவலகம் "உள்துறை அமைச்சகம் 960 வெளிநாட்டினரை தடுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளது" என்று ட்வீட் செய்துள்ளது.

New Delhi:

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 2000க்கும் அதிகமானவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் மரணமடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் மார்ச் 8-10 தேதிகளில் தேசிய தலைநகர் டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் இஸ்லாமிய மதப் பிரச்சார கூட்டம் தப்லீஹி ஜமாத் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் வெளிநாடுகளிலிருந்தும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இது கொரோனா பரவலுக்கு வழிகோலியது.

இந்நிலையில், தப்லீக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி நாட்டைச் சேர்ந்த 1300க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்றும், அதில் 960 பேர் தடுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், தடுப்பபுப் பட்டியலில் உள்ள 960 பேர் சுற்றுலா விசாக்களில் இந்தியா வந்து மத நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார்கள் எனவே, அவர்களுக்கான இந்திய விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. என்று அமித் ஷா அலுவலகம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

“தற்போது அவர்களுடைய விசாவினை நாங்கள் ரத்து செய்துள்ளோம், இந்த நிலையில் அவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவர்கள் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்.”  என்று அதிகாரி ஒருவர்  என்.டி.டிவிக்கு பேட்டியளித்துள்ளார்.

வெளிநாட்டினர் சட்டப்பிரிவு 14-ன் கீழ் தடுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் மத நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் கேட்டுக் கொண்டன, மேலும் பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகமும் உத்தரவிட்டுள்ளது.

இனி மத சார்ந்த நடவடிக்கைகளில் பங்கெடுக்க விசா வழங்கப்படமாட்டாது என அரசு தெரிவித்துள்ளது. "இப்போதைக்கு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளிலோ அல்லது மருத்துவமனைகளிலோ உள்ளனர். மருத்துவ சிகிச்சையின் பின்னர், அவர்கள் இருக்கும் மாநிலங்களில் உள்ள தடுப்பு மையங்களுக்கு மாற்றப்படுவார்கள், பின்பு சட்ட நடவடிக்கைகள் அங்கிருந்து தொடரும்" என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தடுப்பு பட்டியலில் உள்ள 67 நாடுகளைச் சேர்ந்த அவர்களுக்கு உதவ உள்துறை அமைச்சகம் அனைத்து விவரங்களையும் வெளியுறவு அமைச்சகத்திற்கு வழங்கியுள்ளது. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டினரை எவ்வாறு திரும்ப அழைத்துச் செல்லும் என்ற விவரங்களை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வெளிநாட்டு நாட்டினரை வெளியேற்றுவதற்கான உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களின்படி, சம்பந்தப்பட்ட தேசத்தால் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து விமானம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். புறப்படுவதற்கு முன்பு, கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதாக என பரிசோதிக்கப்படுவார்கள். அறிகுறியற்றவர்கள் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் மீண்டும் மருத்துவ முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள்.

.