தாய் உயிரிழந்தது தெரியாமல் தட்டி எழுப்பும் குழந்தை: தொடரும் புலம்பெயர் தொழிலாளர்கள் துயரம்!
Patna: பீகாரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில், தாய் உயிரிழந்தது தெரியாமல் துணியால் மூடப்பட்டிருக்கும் சடலத்துடன் குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும் காட்சிகள் காண்பவர்களின் மனதை கனக்க செய்கிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட, ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் துயரக்கதை முடிவில்லாமல் செய்தியாக தினமும் வந்துகொண்டு தான் இருக்கிறது.
இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் அந்த வீடியோவில், தாய் உயிரிழந்தது தெரியாமல் அவரது சடலம் மூடப்பட்டிருக்கும் துணியை இழுத்து அந்த குழந்தை விளையாடுகிறது. அந்த குழந்தையின் கையுடன் மூடப்பட்டிருக்கும் துணி வருகிறது. ஆனால், அந்த குழந்தையின் தாய் வரவில்லை. கடும் வெப்பம் மற்றும் பசியால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு சில நிமிடங்களுக்கு முன் அவர் உயிரிழந்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் அந்த பெண் பீகாரின் முசாபர்நகர் வந்தடைந்தபோது, இந்த வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதே ரயில் நிலையத்தில், அண்மையில் 2 வயது குழந்தை போதிய உணவில்லாமல், கடும் வெப்பத்தால் உயிரிழந்திருந்தது.
இதுதொடர்பாக உயிரிழந்த அந்த பெண்ணின் உறவினர்கள் கூறும்போது, அவர் ரயிலில் இருக்கும்போதே போதிய உணவில்லாததாலும், தண்ணீர் இல்லாததாலும், உடல்நலம் சரியில்லாமல் இருந்தார் என்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையன்று, குஜராத்தில் இருந்து சிறப்பு ரயிலில் அந்த பெண் புறப்பட்டுள்ளார். தொடர்ந்து, திங்களன்று, ரயில் அவர் இறங்க வேண்டிய முசாபர்நகரை அடைவதற்கு சற்று நேரம் முன்பு அவர் சரிந்து விழுந்துள்ளார்.
இதையடுத்து, அவரது சடலம் ரயில் நிலையத்தின் நடைபாதையில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அவரது மூத்த குழந்தை அழைத்து செல்லும் வரை, இளைய குழந்தை தனது தாய் உயிரிழந்தது தெரியாமல் தொடர்ந்து, சடலத்துடன் விளையாடிய படியும், அவரை எழுப்பிய படியும் இருந்தது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையில்லாமல், உணவில்லாமல், தங்குவதற்கு இடமில்லாமல், தங்களது சொந்த ஊர் திரும்பி செல்ல போக்குவரத்து வசதிகளும் இல்லாமல் தவித்தனர். இதையடுத்து, ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தும், சைக்கிளிலும் செல்ல தொடங்கினர். இதில், பலர் தங்களது சொந்த ஊருக்கு சென்றடைவதற்கு முன்னரே சாலை விபத்திலோ, அல்லது பசியிலோ பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.
முன்னதாக, இந்த மாதம் மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்க துவங்கியது. ஆனால், இதற்கான செயல்முறை காகிதப்பணி மற்றும் பிற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் பலர் சொந்த ஊர் திரும்ப தங்களது சொந்த ஏற்பாடுகளையே செய்து வருகின்றனர்.
இந்த கடுமையான வெயிலிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயணச்சீட்டுகளுக்காகவோ அல்லது ரயில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படும் கொரோனா சோதனைக்காகவோ நீண்ட வரிசையில் காத்திருக்க வைக்கப்படுகின்றனர்.