This Article is From Apr 11, 2020

தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 911 ஆக உயர்வு

கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்தவர்களோடு, அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதித்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாட்களில் இந்த பரிசோதனை முடிந்து விடும் என்று தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 911 ஆக உயர்வு

ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 911 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது
  • புதிதாக இன்று 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
  • தமிழகத்தில் சமூக பரவல் நிலைக்கு கொரோனா இன்னும் செல்லவில்லை

தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 911 பேராக அதிகரித்துள்ளது. 

இந்த 77 பேரில் 5 பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் இருந்து 72 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

இன்று 77 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் (Primary Contacts) 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புடைய 72 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்தவர்களோடு, அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதித்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாட்களில் இந்த பரிசோதனை முடிந்து விடும்.

அதற்கடுத்த படியாக அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும் சோதிக்கவுள்ளோம். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ரேஷனை மட்டுமே நம்பியிருப்பவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. காய்கறிகள் வீட்டிற்கே வந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்திருக்கிறது.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், 'கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 3 வாரக் கால ஊரடங்கு தேவை. அனைத்து மாநிலங்களும் ஊரடங்கைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். இதை செய்யத் தவறினால் நிலைமை சிக்கலாகும்.' என்றார். 

ஏப்ரல் மாதத்தில் எத்நவொரு மதக் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையே இன்று காலை மருத்துவர்கள் குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சில ஆலோசனைகளைத் தெரிவித்தது. இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர்கள், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என முதல்வரிடம் பரிந்துரைத்ததாகத் தெரிவித்தனர்.

இந்த சூழலில் நாளை மாநில அமைச்சரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடவுள்ளது. இதன்பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு வெளியாகும் எனத் தெரிகிறது.

.