Coronavirus: தாயகம் திரும்பிய அனைத்து இந்தியர்களும் மருத்துவர்களால் முழு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
New Delhi: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், வுஹான் பகுதியில் சிக்கியிருந்த இந்தியர்கள் ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். இதற்காக டெல்லி ராம் மனோகர் மருத்துவனையை சேர்ந்த 5 மருத்துவர்கள் குழுவுடன் சீனா சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று காலை தலைநகர் டெல்லியில் தரையிரங்கியது.
தாயகம் மீட்டு வரப்பட்டவர்களில் யாருக்கேனும், வைரஸ் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அது, கேபின் குழுவினர், விமானிகள் மற்றும் சக பயணிகளுக்கும் கடுமையான உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தாயகம் திரும்பிய அனைத்து இந்தியர்களும், விமானிகளும், மருத்துவ குழுவினரும் மருத்துவர்களால் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து, இன்று சீனாவுக்கு மற்றொரு சிறப்பு விமானமும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உதவிய சீன அரசுக்கு இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, 324 இந்தியர்களுடன் சீனாவின் வுஹானில் இருந்து ஏர் இந்தியா விமானம் பிப்ரவரி 1 அதிகாலை புறப்பட்டது. இதில், பெரும்பாலானோர் இந்திய மாணவர்கள் ஆவர். இந்தியர்களை மீட்க உதவிய சீன அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வுஹானில் இருந்து இந்தியா மீட்டு வரப்பட்டுள்ள இந்தியர்கள் 14 நாட்கள் டெல்லி மானேசரில் உள்ள மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். தொடர்ந்து,300 மாணவர்கள் வரை அங்கு தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு எந்த நோய் தொற்று ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான மருத்துவர்கள் குழு அவர்களை முழுமையாக கண்காணிக்கும்.
Coronavirus: தாயகம் திரும்பிய இந்தியர்கள் மருத்துவ குழுக்களால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மேலும், விமான நிலைய சுகாதார ஆணையம் மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் ஆகியவற்றின் கூட்டு குழு இந்தியர்களை விமான நிலையத்திலே முழுமையாக சோதனை செய்கிறது. தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் பேஸ் மருத்துவமனை டெல்லி கன்டோன்மென்ட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்படுவார்கள்.
அப்படி நடக்கம் இந்த சோதனையின் போது, மாணவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். முதல் குழுவில், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மட்டும் அடங்குவர்.. அதாவது, காய்ச்சல் / இருமல் மற்றும் / அல்லது சுவாசக் கோளாறு அறிகுறிகளைக் கொண்ட நபர்கள். இவர்கள் நேரடியாக பேஸ் மருத்துவமனை டெல்லி கன்டோன்மென்ட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்படுவார்கள்.
இரண்டாவது குழுவில் "வைரஸ் தொற்று ஏற்படுதவற்கு காரணமான பகுதிகளில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் மட்டும் அடங்குவர்" - இவர்கள் வைரஸூக்கான அறிகுறிகள் இல்லாதவர்கள்.. எனினும், கடல் உணவு அல்லது விலங்கு சந்தைகளைப் பார்வையிட்டவர்கள் (வுஹானில் உள்ள ஒரு கடல் உணவு சந்தையில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது) அல்லது கடந்த 14 நாட்களில் வைரஸ் அறிகுறிகளைக் கொண்ட சீன நபருடன் தொடர்பு கொண்டவர்கள்.
இத்தகைய நபர்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு வாகனத்தில் நேரடியாக சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மூன்றாவது குழு, வைரஸ் பாதிப்புடையவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு கடந்த 2 வாரங்களில் எந்தவொரு அறிகுறிகளையும் இல்லாதவர்களாகவும், பாதிக்கப்பட்ட சீன நபருடன் தொடர்பு கொள்ளாதவர்களாகவும் உள்ளவர்கள் ஆவர்.
தொடர்ந்து, தனிமைப்படுத்தப்படும் அனைத்து நபர்களும், மூன்று அடுக்கு முகமூடிகளை அணிந்தபடி தினமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 14 நாட்களுக்கு பின்னரும் இவர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றால் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.