This Article is From May 12, 2020

ஏர் இந்தியா விமானிகளுக்கு கொரோனா தொற்று இல்லை!

இந்த ஐந்து விமானிகளுக்கும் ஆர்டி-பி.சி.ஆர்(RT-PCR) சோதனைக் கருவி மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்த கருவிகள் தவறான முடிவினை தெரிவித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இவர்கள் போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானங்களை இயக்கும் விமானிகளாவார்கள்.

New Delhi:

சமீபத்தில் ஏர் இந்தியா விமானிகள் ஐந்துபேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வந்திருந்தன. இந்நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மறு பரிசோதனையில்,  அவர்கள் தொற்றால் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரும், ஓட்டுநர் ஒருவர் முன்னதாக பரிசோதிக்கப்பட்டதில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு தற்போது மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படுமா என்பது குறித்த எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. இருவரும் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

விமானிகள் விமானங்களை இயக்குவதற்கு முன்னர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த நிலையில், 77 விமானிகள் சமீபத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் ஐந்து விமானிகள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகத் தவறாக அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானங்களை இயக்கும் விமானிகளாவார்கள். இந்நிலையில் ஐவரும் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் கடைசியாக ஏப்ரல் 20 அன்று விமானத்தை இயக்கினார்கள்.

இந்த ஐந்து விமானிகளுக்கும் ஆர்டி-பி.சி.ஆர்(RT-PCR) சோதனைக் கருவி மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்த கருவிகள் தவறான முடிவினை தெரிவித்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் எந்த விமானிகளும் தொற்றால் பாதிக்கப்படவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் உள்ள பழைய சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஏர் இந்தியா மெடிகன் பவனில் விமானிகளுக்கான பரிசோதனைக்கு அவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பி.எம்.சி(BMC) அங்கீகரிக்கப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தன.

இந்த ஐந்து விமானிகளும் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்காகும். மும்பையில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளி நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை, மீட்டு கொண்டு வருவதற்கு  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 64 விமானங்களில் சுமார் 15,000 இந்தியர்களை மீட்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மே 7 மற்றும் மே 15 முதல் மேற்கொள்ளப்படும்.

.