123 மாவட்டங்கள் மிக மிக பாதிக்கப்பட்ட பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 நகரங்கள் ஹாட்ஸ்பாட்களாக அறிவிப்பு
- ஹாட்ஸ்பாட்களில் கூடுதல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன
- 170 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
New Delhi: சென்னை, டெல்லி, மும்பை உள்பட 6 நகரங்களை கொரோனா பாதிப்பு ஹாட்ஸ்பாட்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேறகொள்ளப்படவுள்ளது.
மத்திய அரசு இன்று நாட்டில் உள்ள சுமார் 700 மாவட்டங்களில் 170 மாவட்டங்களை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவித்தது. அவற்றில் 123 மாவட்டங்கள் மிக மிக பாதிக்கப்பட்ட பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் உள்ள அனைத்து 9 மாவட்டங்களும் வருகின்றன.
மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபத், சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய மெட்ரோ நகரங்களில் உள்ள சில மாவட்டங்களும் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை சிவப்பு மண்டலங்கள் என்றும் அதிகாரிகள் அழைக்கின்றனர். இவற்றில்தான் 80 சதவீத கொரோனா பாதிப்புகள் இருக்கின்றன.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 6 மெட்ரோ நகரங்களில் கொரோனா தொற்று அதிகம் காணப்படுகிறது. மும்பையில் மட்டும் 1,896 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. டெல்லியில் 1,561 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.
டெல்லியில் 56 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிக்குள் யாரும் உள்ளே செல்லவோ வெளியே வரவோ முடியாது.
சிவப்பு மண்டலம் அல்லது ஹாட்ஸ்பாட்டிற்கு அடுத்த ஆபத்தான மண்டலம் என்ற பகுதியில் 207 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இங்கும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
அனைத்து சிவப்பு மண்டல பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இந்த பகுதிகளில் 28 நாட்களுக்கு புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாவிட்டால் அவை பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
சிவப்பு மண்டல பகுதிகளில் வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.