கூட்டம் காவல்துறையினரால் கலைக்கப்பட்ட பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது
Ambala: தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 28,380 ஆக உயர்ந்துள்ள நிலையில் 886 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் அம்பாலா பகுதியில் உள்ள சந்த்புரா கிராமத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் எனக் கூறி உடலைத் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் மீது அக்கிராம மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
60 வயதில் மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணிற்கு ஆஸ்துமா இருந்துள்ளது. மருத்துவர்கள் பெண்ணின் ரத்த மாதிரிகளை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்னும் சோதனை முடிவுகள் வெளிவரவில்லை. இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணை தகனம் செய்ய முயன்றபோது கிராம மக்கள் தகனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கற்களைக் கொண்டு காவல்துறையினரை தாக்கியுள்ளனர். காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரக்கூட்டத்தினை கலைத்துள்ளனர்.
கலவர கூட்டம் கலைக்கப்பட்ட பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது. “இறந்த பெண் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார். வென்டிலேட்டரில் அவர் இருந்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனா பரிசோதனைக்காக நாங்கள் பெண்ணின் மாதிரிகளைச் சேகரித்துள்ளோம். எனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தகனம் செய்வதற்கு ஏற்றார்போல் அவரின் உடலைப் பாதுகாப்போடு அனுப்பி வைத்தோம்.“ என சிவில் சர்ஜன் டாக்டர் குல்தீப் சிங் கூறியுள்ளார்.
மேலும், “கொரோனா தொற்று உள்ளவர்களாக சந்தேகிக்கப்படுகிற நபரின் உடல் தகனத்திலும், தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் உடல் தகனத்திலும் நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) பின்பற்றப்படுகிறது. இந்த பெண்ணின் உடலும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளோடு தகனம் செய்ய தயார்படுத்தப்பட்டது. ஆனால், கிராமவாசிகள் தேவையற்று இந்த தகனத்தினை எதிர்க்கிறார்கள்.“ என குல்தீப் கூறியுள்ளார்.
மக்களைச் சமாதானப்படுத்த காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. “அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டுள்ளன என நாங்கள் கூறியும் கிராமவாசிகள் சமாதானமடையவில்லை. பின்னர் அவர்கள் மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் மீது கற்கள்கொண்டு தாக்கினர். ஆம்புலன்ஸையும் அவர்கள் சேதப்படுத்தியதைத் தொடர்ந்து நாங்கள் கூட்டத்தினை அடக்குமுறையைக் கையாண்டு கட்டுப்படுத்தினோம்.“ என அம்பாலா கன்டோன்மென்ட் டிஎஸ்பி ராம் குமார் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில், ஊரடங்கை மீறி செயல்பட்டது மற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தாக்கியது போன்றவற்றிற்காகக் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் ராம் குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் 289 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். அம்பாலா பகுதியில் மட்டும் 12 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.