தற்போதுவரை டெல்லியில் 41,182 பேருக்கு கொரோன வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- தற்போதுவரை டெல்லியில் 41,182 பேருக்கு கொரோன வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது
- டெல்லியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம்
- டெல்லியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு
New Delhi: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அங்குள்ளவர்கள் அனைவருக்கு பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக தேசிய தலைநகர் பகுதி (National Capital Region - NCR) உள்ளது. இங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதன் முடிவில் டெல்லியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என இருவரும் உறுதி அளித்துள்ளனர்.
நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிராவும், அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடும் இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது.
தற்போதுவரை டெல்லியில் 41,182 பேருக்கு கொரோன வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி ஆகிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தின் நார்த் ப்ளாக்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், மருத்துவ படிப்பில் 4-ம் ஆண்டில் இருந்து வரும் மாணவர்களை, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ஜூன் 20-ம்தேதிக்குள் நாள்தோறும் குறைந்தது 18 ஆயிரம்பேருக்கு டெல்லியில் பரிசோதனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜூலை மாத நடுப்பகுதியில் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.50 லட்சத்தை தாண்டிவிடும் என்று டெல்லி அரசு முன்பு தெரிவித்திருந்தது.
அதிகரித்து வரும் நோயாளிகளால் படுக்கை பற்றாக்குறையை சமாளிக்க 500 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் டெல்லி அரசுக்கு வழங்கப்படவுள்ளது.
டெல்லியின் அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசம், டெல்லிக்கு செல்லும் சாலைக்கு சீல் வைத்துள்ளது. மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளை பார்க்கும்போது தலைநகரில் நிலைமை அசாதாரணம் அடைந்திருப்பதை உணர முடியும்.