"இதை நாம் சாப்பிட்டப் பின்னர், 45 நிமிடத்திற்கு வேறு எதையும் சாப்பிடக் கூடாது."
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது
- நாட்டில் மூவர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்
- சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா பரவத் தொடங்கியது
உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸை முறியடிக்க புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, “உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸிலிருந்த நம் நாட்டு மக்களைக் காப்பாற்றுவது அனைவரின் கடமையாகும். நம் நாட்டில் பன்றிக் காய்ச்சல், டெங்கு, பறவைக் காய்ச்சல் என எத்தனையோ காய்ச்சல்கள் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் நிலவேம்பு கசாயம் அவற்றுக்கு எதிராக வீரியமாகச் செயல்படும் என்று தெரிந்து கொண்டோம். எந்த நோயாக இருந்தாலும் அதற்கு நம் பாரம்பரியத்தில், சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது.
அதை நாம் மீட்டுருவாக்கம் செய்து, நாட்டு மக்களை கொரோனாவிலிருந்து காக்க வேண்டும். அதற்காகவே தற்போது, நிலவேம்பு கசாயம் - ஃபார்முலா 2-வை உருவாக்கியுள்ளோம். அதில் ஆடாதொடை உள்ளிட்ட பல மூலிகைகள் கசாயத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை நாம் சாப்பிட்ட பின்னர், 45 நிமிடத்திற்கு வேறு எதையும் சாப்பிடக் கூடாது.
இப்படி வேறு எந்த பானத்தையும் சாப்பிடாமல் நிலவேம்பு கசாயம் - ஃபார்முலா 2-வை மட்டும் சாப்பிட்டால் கொரோனாவை முறியடிக்க முடியும். இந்த கசாயத்தை இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுக்க கொண்டு சேர்ப்போம்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “நம் பாரம்பரிய வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே எந்த நோய்களும் நம்மை அண்டாது. இந்தியக் கலாச்சாரத்தைப் பார்த்து மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார்கள். நாமும் பாரம்பரிய முறைப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்,” என்றார்.