நாடு முழுவதும் 22.81 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
New Delhi: தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையானது 1.50 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசு மூன்றாவது முறையாக நீட்டித்து அறிவித்த முழு முடக்க நடவடிக்கையின் காலக்கெடு ஒரு தினங்களில் முடிவடைய உள்ளது. இக்காலகட்டங்களில் பல பொருளாதார நடவடிக்கைகள் மறுதொடக்கம் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 60 நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் மறு ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றது. தற்போது தமிழகம் மற்றும் ஒரு சில மாநிலங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் மாநில அரசுகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஏற்ப மத்திய அரசு தளர்வுகளை அனுமதித்தது. ஆனால், மூன்றாவது முறையாக முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாள் தொடர்ந்து தற்போது வரையிலான நாள் வரை தொற்று பரவலின் வேகம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
தற்போது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் முழு முடக்க நடவடிக்கைகள் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சட்டமானது சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ள வழிவகுக்கின்றது. இந்நிலையில் தற்போது இந்த சட்டத்தினை பயன்படுத்தலாமா என மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்தனை நாட்கள் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை தெரிவித்துள்ளன. சில மாநில முதல்வர்களும் இதனை விமர்சித்துள்ளனர். எனவே அவ்வப்போது முன்னெடுக்கப்படும் முடிவுகளில் சில மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ள இந்த விமர்சனங்கள் காரணமாகின்றன.
தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 1.50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், 22.81 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மே 14 அன்று நிலவரப்படி இந்த எண்ணிக்கையானது பாதிக்கப்பட்டவர்கள் 77,152 என்ற அளவிலும், 11,95,645 பேர் தனிமைப்படுத்தல் எண்ணிக்கையாகவும் இருந்தது.
“தற்போதைய இந்த எண்ணிக்கை உயர்வுக்கான முக்கிய காரணமாக புலம் பெயர் தொழிலாளர்களின் இடப் பெயர்வு முக்கிய காரணியாக கருதப்படுகிறது.“ என அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ரயில் சேவையின் மறுதொடக்கம் மூலமாக மாநில எல்லைகளை கடப்பது தொற்று பரவலுக்கு முக்கியக் காரணம் என அவர் குறிப்பிடுகிறார். தற்போது உள்ள எண்ணிக்கையை காட்டிலும் 12 நாட்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கை மிகக் குறைவாகும்.
நாட்டில் அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது 6.02 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இந்த எண்ணிக்கையானது 12 நாட்களுக்கு முன்னர் அதாவது மே 14 அன்று 2.9 லட்சம் என இருந்தது. அதேபோல குஜராத்தில், தற்போது 4.2 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் இந்த எண்ணிக்கையானது 2 லட்சமாக இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் தற்போது 3.6 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். மே 14 அன்று இந்த எண்ணிக்கையானது 2.3 லட்சமாக இருந்தது. பீகாரில் தற்போது 2.1 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மே 14 அன்று நிலவரப்படி இந்த எண்ணிக்கையானது 1.1 லட்சம் என்கிற அளவில் இருந்தது. சத்தீஸ்கரை பொறுத்த அளவில், மே 14 நிலவரப்படி வெறும், 43,000 பேர்தான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது 1.8 லட்சம் பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
ஒடிசாவில் மற்றும் ஜார்கண்டில் தற்போது 1.1 லட்சம் மற்றும் 88,000 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். மே 14 நிலவரப்படி இந்த எண்ணிக்கையானது முறையே, 72,765 மற்றும் 15,000 என்கிற அளவில் இருந்தது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பியதன் மூலம் இந்த எண்ணிக்கை உயர்வுகள் பதிவாகியுள்ளன. இதுவரை கிட்டதட்ட 35 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு சென்றுள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.