This Article is From Apr 16, 2020

பரவும் கொரோனா : பாதுகாப்பு உபகரணங்களை சீனாவில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்த அசாம்

பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்யும் மையப்பகுதியாக சீனா தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது

பரவும் கொரோனா : பாதுகாப்பு உபகரணங்களை சீனாவில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்த அசாம்

எங்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்

ஹைலைட்ஸ்

  • எங்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பாதுகாப்பாக
  • இந்த பணி ஒரு சவாலான பணி என்றும், இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்து
  • பிபிஇ கருவிகளை நேரடியாக வாங்குவது எளிதான காரியமல்ல
Guwahati:

கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் மக்களுக்காக போராடி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க இந்திய நாடு போராடி வருகின்றது. இந்த நேரத்தில் சீனாவில் இருந்து நேரடியாக பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் முதல் மாநிலமாக மாறியுள்ளது அசாம். நேற்று இரவு 8:15 மணியளவில், சீனாவின் குவாங்சோவிலிருந்து ஐந்து மணிநேர பயணத்திற்கு பிறகு 50,000 பாதுகாப்பு உபகரணங்களுடன் குவஹாத்தியில் தரையிறங்கியது ப்ளூ ட்ராட் இயக்கும் அந்த விமானம். பல நாடுகளில் ஏற்றுமதி முடக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்யும் மையப்பகுதியாக சீனா தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நேற்று இரவு குவஹாத்தி விமான நிலையத்தை அடைந்த அந்த பாதுகாப்பு உபகரணங்களை அஸ்ஸாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டார். "இந்தியா உள்பட பல நாடுகள் சீனாவில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் அசாம் மாநிலம் தான் முதல்முறையாக சீனாவில் இருந்து நேரடியாக பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்கின்றது என்றும், அமெரிக்காவும் சீனாவில் இருந்து கொள்முதல் செய்கின்றது" என்றும் திரு சர்மா தெரிவித்தார்.

அசாமில் 2 லட்சம் ("பர்சனல் ப்ரொடெக்ட்டிவ் கிட்") பிபிஇ கிட் தயார் நிலையில் வைத்திருக்க இலக்கு இருந்தது என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று வந்த இந்த சரக்கு வருவதற்கு முன்பு, அசாமில் சுமார் ஒரு லட்சம் பிபிஇ கருவிகள் இருந்தன. "நாங்கள் சிறிய எண்ணிக்கையில் பிபிஇ கிட்களை வாங்குவதால் இது எங்களுக்கு ஒரு பெரிய தடையை நீக்கியுள்ளது. ஆனால் அவை தொடர்ந்து கிடைப்பது குறித்து ஒரு கவலை உள்ளது. விரைவில் இந்த உபகரணங்களை எங்கள் சுகாதார ஊழியர்களுக்கு விநியோகிப்போம்" என்று திரு சர்மா கூறினார்.

இந்த பிபிஇ கருவிகளை நேரடியாக வாங்குவது எளிதான காரியமல்ல, பல வளங்களைக் கொண்ட பல பெரிய மாநிலங்களே இந்த விஷயத்தில் போராடி வருகின்றன. மேலும் இந்த உபகரணங்களை பெற அசாம் சிறந்து வழியில் செயல்பட்டுள்ளது என்றும் சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரிய அரங்கங்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மாற்றுவது முதல் மூன்று மருத்துவக் கல்லூரிகளை காலி செய்து கோவிட் -19 மருத்துவமனைகளாக மாற்றுவது வரை, அசாமின் பல புதுமையான யோசனைகள் அம்மாநிலத்தை கொரோனா-விற்கு எதிராக சிறந்த முறையில் போராட வழிவகுத்துள்ளது. 

மேலும் இந்த பணி ஒரு சவாலான பணி என்றும், இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்து சில ஆயிரம் பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "எங்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதே போல பிற மாநிலங்கள் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் பெற படும் சிரமத்தை அசாம் பெறக்கூடாது என்று எண்ணினோம்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். ஹிமந்தா பிஸ்வா சர்மா இல்லாமல் இது சாத்தியமில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

அசாம் மாநிலத்தில் இது வரை 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு ஒருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்.

.