This Article is From Apr 22, 2020

சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை: மத்திய அரசு

மருத்துவர்கள் அல்லது சுகாதாரப் பணியாளர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற வகையில், 120 ஆண்டுகள் பழமையான தொற்றுநோய் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. 

சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை: மத்திய அரசு

கொரோனா: சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை!

ஹைலைட்ஸ்

  • சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை
  • மருத்துவர்களைப் பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம்
  • ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும்.
New Delhi:

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், மருத்துவர்களைப் பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

அதன்படி, சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும். மேலும் ஆறு மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாட்டை காப்பாற்ற முயற்சித்து வரும் சுகாதார பணியாளர்கள் துரதிர்ஷ்டவசமாக தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு எதிரான வன்முறை அல்லது துன்புறுத்தல்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது. 

இதற்காக அவரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, இது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது ஒப்புதலை பெற்ற பின்னர் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று அவர் கூறினார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் இருக்கும் சுகாதார பணியாளர்களும், மற்றும் களத்தில் இருக்கும் மற்ற ஊழியர்களுக்கும் நாடு முழுவதும் மக்கள் நன்றி தெரிவித்து வரும் அதே நேரத்தில், ஒரு சிலர் அவர்கள் வைரஸைப் பரப்புகிறார்கள் என்று நினைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். 

மருத்துவர்கள் அல்லது சுகாதாரப் பணியாளர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற வகையில், 120 ஆண்டுகள் பழமையான தொற்றுநோய் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. 

இந்த சட்டம் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், உதவியாளர்கள் மற்றும் ஆஷா தொழிலாளர்களைப் பாதுகாக்கும் என்று அவர் கூறினார். மேலும், சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் தொகையும் நீட்டிக்கப்படும், என்று அவர் கூறினார்.

.