This Article is From Jul 01, 2020

திருமணத்திற்கு அடுத்த நாள் மணமகன் உயிரிழந்த பரிதாபம்! பங்கேற்ற 111 பேருக்கு கொரோனா!!

திருமணம் மற்றும் இறுதி சடங்கு நிகழ்வுகளில் எத்தனை நபர்கள் பங்கேற்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தும் அதை பின்பற்றாததே இந்த தொற்று பரவலுக்கு காரணம் என தெரியவருகிறது.

பீகார் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10 ஆயிரத்தினை கடந்துள்ளது

ஹைலைட்ஸ்

  • திருமணத்திற்கு அடுத்த நாளில் மணமகன் உயிரிழந்துள்ளார்
  • குடும்பத்தினர் சிலர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்தனர்
  • பீகார் மாநிலத்தில் 10,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு
Patna:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.85 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற திருமணத்தில், மணமகன் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் திருமணத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட விருந்தினர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநில தலைநகர் பாட்னாவில் பாலிகஞ்சைச் சேர்ந்த ஒருவரின் திருமணத்தில் 350 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். குர்கானை தளமாகக் கொண்ட மணமகன், ஒரு பொறியியலாளர், இவர் திருமணத்திற்கு முன்னர் உடல் நலக்குறைவோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார். பின்னர் உறவினர்களின் வற்புறுத்தலோடு மணமகன் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்வு ஜூன் 14 அன்று நிகழ்ந்துள்ளது. அடுத்த நாளில் மணமகன் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் உயிரிழந்தவருக்கு இறுதி சடங்கு செய்துவிட்டதால், உயிரிழந்த மணமகனுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனையை செய்ய முடியவில்லை. அதன் பின்னர் குடும்பத்தினர் சிலர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஐ எட்டியபோது, ​​திருமணத்திற்காக அல்லது மணமகனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட கிட்டத்தட்ட 400 பேரிடமிருந்து அதிக பரிசோதனைகளை நடத்திடவும் அடையாளம் காணவும், தனிமைப்படுத்தவும் ஜூன் 24 முதல் 26 வரை ஒரு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவற்றில், 86 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் கட்டுப்பாடுகளை மீறி திருமணத்தில் கலந்து கொண்ட 50 க்கும் மேற்பட்டோர் மீது விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருமணம் மற்றும் இறுதி சடங்கு நிகழ்வுகளில் எத்தனை நபர்கள் பங்கேற்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தும் அதை பின்பற்றாததே இந்த தொற்று பரவலுக்கு காரணம் என தெரியவருகிறது.

பீகார் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10 ஆயிரத்தினை கடந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 15 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.