டிவி, பத்திரிகைகளில் மத்திய அரசு விளம்பரம் செய்வதை தவிர்க்க வேண்டும் கோரியுள்ளார் சோனியா.
ஹைலைட்ஸ்
- கொரோனா நிவாரண நிதி திரட்ட 5 வழிகளை மத்திய அரசுக்கு சோனியா கூறியுள்ளார்
- ''டெல்லி சீரமைப்பு நிதி ரூ. 20 ஆயிரம் கோடியை ரத்து செய்ய வேண்டும்''
- வெளிநாட்டுப் பயணங்களை அரசின் அனைத்து தரப்பினரும் தவிர்க்க கோரிக்கை
New Delhi: டெல்லியை மறு சீரமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ. 20 ஆயிரம் கோடியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 5 நடவடிக்கைகளை மேற்கொண்டு மத்திய அரசு நிதியை சிக்கனப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பாதிப்பு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கையாக செலவைக் குறைக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் செலவைக்குறைக்கும் 5 வழிகளை மத்திய அரசுக்கு சோனியா காந்தி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது-
டெல்லி மற்றும் நாடாளுமன்றத்தை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 20 ஆயிரம் கோடியை மத்திய அரசு ரத்து செய்து, அதனை கொரோனா நிவாரண பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும். இப்போதுள்ள நாடாளுமன்றத்திலேயே சுமுகமாக பணிகளை மேற்கொள்ள முடியும். அதனை புதுப்பிப்பதற்கு அவசரம் ஒன்றும் ஏற்படவில்லை.
நாடாளுமன்றத்தை புதுப்பிப்பதற்கு பதிலாக அடிப்படை வசதிகளைக் கொண்ட புதிய மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்காக கட்டலாம். மருத்துவ பணியாளர் நலனுக்காக ரூ. 20 ஆயிரம் கோடியை பயன்படுத்தலாம்.
ஊடக விளம்பரங்களுக்காக ஆண்டுக்கு சராசரியாக ரூ. 1,250 கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது. இந்த விளம்பரங்களை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசு மொத்த செலவில் 30 சதவீதம் வரை (ரூ. 2.50 லட்சம் கோடி)குறைத்துக் கொண்டு அதனை வெளிமாநில தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு குறு தொழில் செய்வோரின் நலனுக்கு பயன்படுத்தலாம்.
குடியரசு தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களை முடிந்தவரை ஒத்தி வைக்க வேண்டும். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டு பயண செலவு மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 393 கோடியாக உள்ளது.
PM Cares -க்கு அனுப்பப்படும் கொரோனா நிவாரண நிதி அனைத்தும், பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் வெளிப்படைத் தன்மை, கணக்கீடு உள்ளிட்டவை உறுதி செய்யப்படும். ஏற்கனவே பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ரூ. 3,800 கோடி வரை பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சோனியா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.