மார்ச் 24-ம்தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டியது
- ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்க உத்தரவு
- உலகளவில் அமெரிக்கா கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.
New Delhi: இந்தியாவில் இன்றைக்கு புதிதாக 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,069 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்…
- டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், மொத்த பாதிப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
- தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
- நாளை காலை 9 மணிக்கு பிரதமர் மோடி வீடியோ அறிவிப்பை ஒன்றை வெளியிடவுள்ளார். இது கொரோனா தடுப்பு தொடர்புடையதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஊரடங்கு விதிகளை மீறி மருத்துவ பணியாளர்களை தாக்குவோரை, 2 ஆண்டுகள் வரையில் சிறையில் அடைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று 75 அதிகரித்து மொத்தம் 309-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 264 பேர் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.
- தமிழகத்தில் இருந்து தப்லீக் ஜமாத் மாநாட்டில் 1,103 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரிடமும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முடிவு நாளை தெரியவரும் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
- மும்பை தாராவி பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்ட 2-வது நபர் கண்டறியப்பட்டுள்ளார். குடிசைவாழ் மக்கள் நெருங்கி வசிக்கும் பகுதி என்பதால், தாராவி முழுவதும் சீல் வைக்கப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- உலகளவில் 9 லட்சத்து 81 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு 50,253 ஆக அதிகரித்துள்ளது.
- உலகளவில் மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 264 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
- வல்லரசாக திகழும் அமெரிக்காவில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் அங்கு 12 ஆயிரம்பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.