மொத்தம் 90 இடங்கள் நோய்த் தடுப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
New Delhi: தலைநகர் டெல்லியில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களிடையே பதற்றம் காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் 792 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் ஏற்பட்ட மிக அதிக பாதிப்பு இதுவாகும்.
தற்போதுவரை டெல்லியில் 15,257 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. 310 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,264 ஆக அதிகரித்துள்ளது. நோயில் இருந்து குணம் அடைவது 47.61 சதவீதமாக டெல்லியில் உள்ளது.
மொத்தம் 90 இடங்கள் நோய்த் தடுப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பாக சிவப்பு மண்டல பகுதி 76 என்ற எண்ணிக்கையில் இருந்தது.
மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக டெல்லியில் கொரோனா பாதிப்பு இருக்கிறது.
கடந்த 16-ம்தேதி நிலவரப்படி டெல்லியில் 9 ஆயிரம்பேருக்கு மட்டுமே பாதிப்பு இருந்தது. அடுத்த 10 நாட்களில் பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்திருக்கிறது.
மெட்ரோ ரயில் சேவையை மீண்டும் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் டெல்லி அரசு உள்ளது. மெட்ரோவில் பயணம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன, ஆனால் அதிகாரப்பூர்வ தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
டெல்லியில், லாக் டவுன் 4 வழிகாட்டுதலின் கீழ், ஓட்டுநரைத் தவிர இரண்டு நபர்களுடன் டாக்சிகள் மற்றும் வண்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரே நேரத்தில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் இல்லாமல் பேருந்துகள் இயக்க முடியும்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 18 ஆயிரத்து 545 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய பாதிப்பில் 678 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்திற்கு மகாராஷ்டிராவில் இருந்து வந்த 138 பேருக்கும், கேரளாவை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 ஆயிரத்து 231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 508 பேர் ஆண்கள், 309 பேர் பெண்கள் ஆவர்.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 18 ஆயிரத்து 545 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 11,725 பேர் ஆண்கள், 6,815 பேர் பெண்கள், 5 பேர் திருநங்கைகள் ஆவர்.