இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்தது; 39,795 பேர் உயிரிழப்பு!
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 19 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,509 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 19,08,524 ஆக உள்ளது. ஒரே நாளில் 857 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 39,795 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12,82,215 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 67.19 சதவீதமாக உள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில், அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
மகாராஷ்டிராவில் இதுவரை 16,142 பேர் உயிரிழந்துள்ளனர். 4,57,956 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்றைய தினம் மட்டும் 5,063 பேர் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2,68,285 ஆக உள்ளது.
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,747 கொரோனா வைரஸ் வழக்குகள் புதிதாக பதிவாகியுள்ளன, இது மாநிலத்தின் எண்ணிக்கையை 1,76,333 ஆக உயர்த்தியுள்ளது.
இதுவரை 1,39,156 வழக்குகள் பதிவாகியுள்ள டெல்லியில் தற்போது 10,000க்கும் குறைவானவர்களே சிகிச்சை பெற்று வருகின்றனர் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்வீட்டர் பதிவில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பில் டெல்லி இப்போது 14வது இடத்தில் உள்ளது. இங்கு உயிரிழப்புகளும் குறைந்துவிட்டன. டெல்லிவாசிகள், நான் உங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன். உங்கள் "டெல்லி மாடல்" எல்லா இடங்களிலும் விவாதிக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் மனநிறைவு கொள்ளாமல் தொடர்ந்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாரத் பயோடெக் உள்நாட்டிலேயே உருவாக்கிய இரண்டு கோவிட் -19 தடுப்பூசிகள், முதல் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. தொடர்ந்து, இரண்டாம் கட்ட சோதனைக்கு நகர்ந்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.