This Article is From May 06, 2020

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது!!

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிக பாதிப்பை அடைந்துள்ளது. இங்கு மட்டும் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை இந்தியாவில் 50 ஆயிரத்தை தாண்டியது
  • மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 16 ஆயிரம்பேருக்கு கொரோனா தொற்று
  • நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட 2-வது மாநிலமாக குஜராத் உள்ளது
New Delhi:

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவின் முதன்முறையாக கேரளாவை சேர்ந்த நபர் 4 மாதங்களுக்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்றைக்கு கொரோனா தொற்று பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்திருக்கிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது எண்ணிக்கை 50,545 ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களில் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். அங்கு மட்டும் 1,650-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

நோய் பாதிப்பில் இருந்து மகாராஷ்டிராவில் 14 ஆயிரம்பேர் மீண்டுள்ளார்கள். அங்கு பலி எண்ணிக்கை 1,650 யை தாண்டியுள்ளது.

இன்றைக்கு மகாராஷ்டிராவில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பையில் மட்டும் 10,714 பேருக்கு பாதிப்பு உள்ளது. 

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக குஜராத்தில் 6,200க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோருடன் டெல்லியில், டெல்லிக்கு அடுத்த இடத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருடன் தமிழகமும் பாதிப்பு பட்டியலில் உள்ளன.

மிகவும் அபாயகரமான கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவாகி, மார்ச்சுக்குள் உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்தியாவில் ஜனவரி 30-ம்தேதி முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவை சேர்ந்த அந்த மாணவர் வுஹான் பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார்.

இதன்பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக மார்ச் 25-ம்தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டு 2 முறை நீட்டிக்கப்பட்டது.

தற்போது மே 17-ம்தேதி வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 நாட்களுக்கும் மேலாக பொது முடக்கம் நடைமுறையில் இருப்பதால் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருந்து இந்தியா மீள்வதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.