This Article is From May 12, 2020

நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது! 2,293 பேர் உயிரிழப்பு!!

இம்மாதம் 17-ம் தேதிக்கு பிறகு முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்படலாம் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சிவப்பு மண்டலங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் தளர்வுகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது!  2,293 பேர் உயிரிழப்பு!!
New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 70 ஆயிரத்தை கடந்திருக்கிறது. ஒட்டு மொத்த அளவில், 70,756 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2,293 பேர் உயிரிழந்துள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 3,604 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். 87 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு முடக்க நடவடிக்கையானது இம்மாதம் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் கலந்தாலோசனையை மேற்கொண்டார். இம்மாதம் 17-ம் தேதிக்கு பிறகு முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்படலாம் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சிவப்பு மண்டலங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் தளர்வுகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 23,401 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக 1,230 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 868 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
  • இதற்கு அடுத்தபடியாக குஜராத் உள்ளது. இம்மாநிலத்தில் 8,541 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 513 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
  • தமிழகத்தினை பொறுத்த அளவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக 798 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக 8,002 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையின் மூலமாக 1,800 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,500 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், வரும் வாரங்களில் இதுபோன்று அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலிகமாக சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் தொற்றிலிருந்து இதுவரை மீண்டவர்களின் விகிதமானது கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 31.73 சதவிகிதமாக மீட்பு விகிதம் உயர்ந்துள்ளது. இதுவரை 22,455 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
  • “தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முதலில் அமல்படுத்தப்பட்ட முழு முடக்க நடவடிக்கையானது அடுத்த முறை நீட்டிக்கப்படும் போது முன்னர் இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் தற்போது இருக்கும். அதேபோல இரண்டாவது முறையாக அமல்படுத்தப்பட்ட முழு முடக்க நடவடிக்கை மூன்றாவது முறையாக நீட்டிக்கப்படும் போது, முன்னர் இருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்படும் என பிரதமர் மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் கலந்தாலோசனையை மேற்கொண்ட பின்னர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
  • மேலும், “தற்போது உலகம், கொரோனாவுக்கு முந்தைய செயல்பாடு மற்றும் கொரேனாவுக்கு பிந்தைய செயல்பாடு என தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. இது உலக போருக்கு முந்தைய உலகம் மற்றும் அதற்கு பிறகான உலகம் என்பதை போல உள்ளது. நாம் தற்போது முற்றிலும் வேறுபட்ட உலக இயக்கத்திற்குத் தயாராக வேண்டும். நம்முடைய செயல்பாடுகளில் இது குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தும்“ என பிரதமர் தெரிவித்துள்ளார்.
  • தற்போது குறிப்பிட்ட சில வழித்தடங்களுக்கு மட்டும் ரயில் சேவை இயங்க தொடங்கியுள்ளது. 30 ரயில்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேசிய தலைநகர் டெல்லியிலிருந்து சென்னை, திருவனந்தபுரம், மும்பை, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களை இந்த ரயில்கள் இணைக்கின்றன. இது குறித்த அட்டவணையை ரயில்வே வெளியிட்டுள்ளது.
  • நாட்டின் இயல்பு நிலை மறுதொடக்கத்திற்கு இடையில், புலம் பெயர் தொழிலாளர்களின் மோசமான நிலைமை குறித்த தகவல்கள் பல வந்துகொண்டிருக்கின்றன. ஹரியானா மற்றும், உத்தரப் பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில், தங்களது கிரமாங்களுக்கு நடைப்பயணமாக சென்றுகொண்டிருந்த இரண்டு புலம் பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
  • சர்வதேச அளவில், 41,75,272 பேர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,85,970 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
  • சர்வதேச அளவில் பல நாடுகளில் முழு முடக்க உத்தரவுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது அல்லது முழுமையாக வெளியேறும் போது விழிப்புணர்வு அவசியம் என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தியுள்ளது. 

.