This Article is From Jun 12, 2020

நாடு முழுவதும் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா! 396 பேர் உயிரிழப்பு!!

இந்தியா தற்போது கொரோனா பாதித்த உலக நாடுகளின் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா! 396 பேர் உயிரிழப்பு!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது மூன்று லட்சத்தினை நெருங்குகின்றது தற்போது 2,97,535 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,41,842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,47,195 பேர் குணமடைந்துள்ளனர். 8,498 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 10,956 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 396 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது கொரோனா பாதித்த உலக நாடுகளின் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 53,63,445 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,50,305 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதமானது 49.47 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இரண்டாவது நாளாக நேற்று, பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாட்டில் கொரோனா தொற்று சமூக பரவலாக பரிணமித்துவிட்டதா என்கிற சந்தேகம் மேலெழுந்திருந்தது. ஆனால், தேசிய அளவில் கொரோனா தொற்றானது சமூக பரவலாக பரிணமிக்கவில்லை என மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது.

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  3,607 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 152 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மாநிலத்தில் இதுவரை 97,648 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 46,078 பேர் குணமடைந்து உள்ளனர். சர்வதேச அளவில் ஒப்பிட்டால் மகாராஷ்டிரா, கனடா நாட்டின் எண்ணிக்கையை நெருங்கி வருகிறது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் மட்டும் 54,085 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,540 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 1,954 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் தென் மாநிலமான தமிழகத்தை பொறுத்த அளவில் 38,716 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழகம் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோன பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் அனைவரும் குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.