இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனாவால் ஒரே நாளில் 40,000 பேர் பாதிப்பு!
New Delhi: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 681 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 11,18,043 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 27,487 ஆக அதிகரித்துள்ளது. எனினும், குணமடைபவர்களின் எண்ணிக்கையானது 62.61 சதவீதமாக உள்ளது. இதுவரை 7,00,087 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகம் பாதிப்பு உள்ள முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகம், டெல்லி, கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் உள்ளன.
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 9,518 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது, 3,10,455ஆக உயர்ந்துள்ளது. இதில், மும்பையில் மட்டும், 1083 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். புனேவில் 1,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 40,000ஆக உயர்ந்துள்ளது.
தமிழத்தில் ஒரே நாளில் 4,979 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1.70 லட்சத்தை தாண்டியது. தலைநகர் சென்னையில் மூன்று வார லாக்டவுனை தொடர்ந்து, தற்போது, பாதிப்பு எண்ணிக்கை குறைந்து நிலையாக 1,200 வரை பதிவாகி வருகிறது. எனினும், சென்னையை சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களிலும், தென் மாவட்டமான மதுரையிலும் தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உத்தர பிரதேசத்தில் 49,650 பேர் வரை இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் லக்னோவில் தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனை ஒட்டியுள்ள பகுதியான கான்பூர் பகுதியிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
அசாமில் 21 நாட்களுக்கு பிறகு இன்று முதல் லாக்டவுன் தளர்வு செய்யப்படுகிறது. எனினும் அங்கு ஒரே நாளில் 1.018 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 23,999 ஆக உள்ளது.
கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 4,120 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 63,772 ஆக உயர்ந்துள்ளதாக அரசு தகவல் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையானது 1,331 வரை அதிகரித்துள்ளது.
கேரளாவில் 12,000 வரை பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 13 சுகாதார பணியாளர்கள் உட்பட 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, தலைநகர் திருவனந்தபுரத்தில் ஜூலை 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து பிகார், அசாம், ஆந்திர பிரதேசம், தெலுங்கான, தமிழகம், இமாச்சல பிரசேதம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் நேற்றைய தினம் ஆலோசனை மேற்கொண்டார்.
அமெரிக்காவில் நேற்றைய தினம், 63,872 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 6.05 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.44 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.